யுனெஸ்கோ நிறுவனத்துடன் முத்தரப்பு உடன்படிக்கை

யுனெஸ்கோ நிறுவனம், கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சு மற்றும் தெற்காசிய ஆசிரியர் அபிவிருத்தி மையம் ஆகியவற்றுக்கிடையில், யுனெஸ்கோவின் எனும் அந்தஸ்தை தெற்காசிய ஆசிரியர் அபிவிருத்தி மைய நிறுவனத்திற்குப் புதுப்பிக்கும் நோக்கிலான முத்தரப்பு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு, அலரி மாளிகையில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது, ஆசிரியர் அபிவிருத்தித் துறைக்கு வாழ்நாள் முழுவதும் வழங்கிய சிறப்புமிக்க கல்விசார் பங்களிப்பையும், ஆராய்ச்சி மற்றும் அறிவுசார் தலைமைத்துவத்தில் ஆற்றிய முக்கிய பங்கையும் பாராட்டி, தெற்காசிய ஆசிரியர் அபிவிருத்தி மைய நிறுவனத்தின்  முதலாவது ‘ஆசிரியர் மேம்பாட்டு அறக்கட்டளைப் பேராசிரியர்’ கௌரவிப்பு பேராசிரியர் லக்ஷ்மன் சமரநாயக்கவுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் வழங்கப்பட்டது.

அத்தோடு “SACTD: A Collaborative Regional Journey” எனும் நினைவுப் பதிப்பு Coffee Table Book, பிரதமருக்கும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளருக்கும் வழங்கப்பட்டது.

அதனை அடுத்து இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

ஆசிரியர் கல்வியையும் ஆசிரியர்களையும் பலப்படுத்துவது இன்றியமையாதது என்பதை வலியுறுத்தியதோடு, வேகமாக மாற்றமடைந்து வரும் தொழில்நுட்ப உலகின் தேவைகளுக்கு ஆசிரியர்கள் திறன்பட முகம் கொடுக்கக் கூடிய விதத்திலும், அவசியமான மாற்றங்களுக்குத் தங்களை தயார்படுத்திக்கொள்வதற்கும் தேவையான ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தெற்காசிய ஆசிரியர் அபிவிருத்தி  மையம் போன்ற பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார். பிராந்திய நாடுகளுக்கிடையில் அர்த்தபுஷ்டியான கலந்துரையாடல்களை முன்னெடுத்து, ஒத்துழைப்பைப் பலப்படுத்தி, கல்வித்துறையில் ஏற்படுகின்ற சவால்களுக்குப் பொதுவான கொள்கை அணுகுமுறைகளை உருவாக்குவது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்