பௌத்த பீடம் அரசியல் யாப்புக்கு மேலானது என்ற வெளிப்பாடு!!! ரணில்- சஜித் – சந்திரிகா மௌனம்!!!

பௌத்த பீடம் அரசியல் யாப்புக்கு மேலானது என்ற வெளிப்பாடு!!! ரணில்- சஜித் – சந்திரிகா மௌனம்!!!

* பௌத்த குருமாரை கட்டுப்படுத்த முடியாது என ராஜபக்ச குடும்பம் விளக்கம்…

* சிறுமிக்கான நீதியை விடவும் தேரரைக் காப்பாற்ற முற்படும் சிங்கள பிரதான ஊடகங்கள்…

* எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தற்காப்பு பதில்கள்…

இலங்கை ஒற்றையாட்சி அரசியல் அமைப்புச் சட்டம் அனைவருக்கும் சமமானது என்று கற்பிதம் செய்யப்பட்டாலும், பௌத்த மகா சங்க உயர் பதவியில் இருப்பவர்கள் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் போது, சட்டம் அங்கு செயலிழந்து போகிறதா என்ற கேள்வி தற்போது நியாயமாகிறது.

பிரதான எதிர்க்கட்சிகளில், ராஜபக்ச குடும்பத்தை மையப்படுத்திய உறுப்பினர்கள், சிறுமி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டிலிருந்து அட்டமஸ்தானாதிபதி ஹேமரத்ன தேரரைக் காப்பாற்ற முற்படுகிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவருடைய மகன் நாமல் ராஜபக்ச மற்றும் பௌத்த அமைப்புகள், குற்றம் புரிந்ததாகக் கருதப்படும் தேரரை காப்பாற்றப் பகிரங்கமாகவே முற்படுகிறார்கள் என்பது பட்டவர்த்தனம்.
அதாவது, ‘தேரர்கள் விவகாரத்தில் அரசாங்கம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை’ என்ற தொனியை ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது மகிந்த வெளிப்படுத்தியிருந்தார்.

அதேநேரம், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இந்த விவகாரத்தில் அமைதி காப்பது ஏன்?
கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக ஆகியோர் இதுவரை எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை.

சஜித் பிரேமதாசவின் உத்தியோகபூர்வ சமூக ஊடகப் பக்கங்களிலோ (X, Facebook) அல்லது ஊடகச் சந்திப்புகளிலோ இச்சம்பவம் குறித்து எந்தவொரு கண்டனமோ, விளக்கமோ அல்லது அறிக்கையோ வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை.

அதேநேரம், ரணில் விக்கிரமசிங்கவும் அவரது ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) இந்த விவகாரத்தில் எந்தவொரு உத்தியோகபூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.

மகிந்த ராஜபக்ச தேரரைக் காப்பாற்றும் தொனியில் பகிரங்கமாகப் பேச, சஜித் – ரணில் ஆகிய இரு பிரதான தலைவர்களும் தங்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் பௌத்த வாக்கு வங்கிக் காரணி கருதி, ஒரே நேர்க்கோட்டில் மௌனம் காக்கின்றனர்.

பெண் உரிமைகள் – சிறுவர் பாதுகாப்புத் தொடர்பான விடயங்களில் வழமையைக் குரல் கொடுத்து வரும், சந்திரிகா குமாரதுங்கவும் மௌனம் காக்கிறார்…

எட்டு மகா புண்ணிய பௌத்த ஸ்தலங்களின் அதிபதி என்பது, இலங்கையின் பௌத்த சமூகத்தில் மிக உயர்ந்த மற்றும் மிக மதிக்கப்படும் ஆன்மீகப் பதவியாகும்.

ஆகவே, பௌத்த பிடாதிபதிகளுக்கு சிங்கள அரசியல் தலைவர்கள், மதிப்புக் கொடுக்கிறார்கள் என்பதை விடவும் அஞ்சுகிறார்கள் என்பேதே பொருளாகும்.

இத்தகைய விவகாரத்தில் அரசியல் ரீதியாக கருத்து தெரிவிப்பது, பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தி, எதிர்கால வாக்கு வங்கியை பாதிக்கலாம் என்ற அரசியல் முன்னெச்சரிக்கையும், இவர்களின் மௌனத்திற்கு காரண – காரியமாகும்.

எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலரிடம் ஊடகவியலாளர்கள் மறைமுகமாகக் கேள்வி எழுப்பிய போது, அவர்கள் தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டை விமர்சிப்பதைத் தவிர்த்து, “சட்டமும் நீதியும் தன் கடமையைச் செய்ய வேண்டும், நீதிமன்ற விசாரணைகளில் அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது” என்ற பொதுவான தற்காப்பு பதில்களை மாத்திரமே வழங்கி வருகின்றனர்.

நான்கு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல் சஜித் தலைமையிலான எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் (Women Parliamentarians’ Caucus) பாதிக்கப்பட்ட சிறுமியின் பாதுகாப்பு குறித்து சட்டரீதியான கண்காணிப்புகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால், சஜித் இதனை ஒரு அரசியல் விவாதப் பொருளாக மாற்ற விரும்பவில்லைப் போல் தெரிகிறது.
இந்த விவகாரத்தில் சஜித் பிரேமதாசவின் மௌனம் என்பது தற்செயலானது என்று அவதானிக்க முடியாது.
அது தற்போதைய அரசியல் பின்னணியைக் கருத்திற்கொண்டு மிகத் திட்டமிட்டு பேணப்படும் ஒரு அரசியல் மௌனம் (Strategic Silence) என்பது உறுதியாக தெரிகிறது.

அதேநேரம், அநுர அரசாங்கம், பௌத்த சங்க நீதிமன்றத்தை அமைத்து விசாரணை செய்யப் போவதாக அறிவித்தமை, இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு மேலாக, மகாநாயக்கத் தேரர்களின் பரிந்துரைகள் – ஆலோசனைகள் புனிதமானது என்பதை பகிரங்கப்படுத்தி உள்ளன.

ஆகவே தேரரை காப்பாற்ற இப்போது சிங்கள அரசியல் தலைவர்கள் மூன்று முனைகளில் காய் நகர்த்துகின்றனர் என்பது பட்டவர்த்தனம்…

1) பௌத்த சங்க நீதிமன்றம்…

2) பௌத்த குருமார் விவகாரத்தில் தலையிடக்கூடாது. அவர்களுக்கு என்று ஒரு தனிப் பாதை உண்டு என்ற ராஜபக்ச குடும்பத்தின் விளக்கம்…

3) எதிர்க்கட்சி உள்ளிட்ட சிங்கள தலைவர்களின் நீண்ட மௌனம்…

அதேநேரம், சிங்கள பிரதான அச்சு – இலத்திரனியல் ஊடகங்கள், தேரரின் கைது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை மற்றும் பிணை வழங்கப்பட்ட செய்திகளை உத்தியோகபூர்வ நீதிமன்ற தகவல்களாக மாத்திரமே வெளியிட்டன.

குறிப்பிட்ட ஒரு ஆங்கில நாளிதழ் மாத்திரமே, செய்திகள்- கேலிச் சித்திரங்கள் போன்றவற்றை பிரசுரித்தன.
சிங்கள சமூக ஊடகங்கள் பலவும் இந்த விவகாரத்தை மூடிமறைத்துள்ளன. ஓரிரு சமூக ஊடகங்கள் தேரரின் தவறை பகிரங்கமாக சுட்டிக்காட்டியுள்ளன.

குறிப்பிட்ட சில அரசசார்பற்ற நிறுவனங்கள், சில சிவில் சமூக அமைப்புகள் மாத்திரம், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.

ஆனால், அநுராதபுரத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய. அவர்கள் அஞ்சுகிறார்களோ என்ற பலமான கேள்வியை எழுப்பியுள்ளது…

அநுராதபுரம் அட்டமஸ்தானதிபதி என்ற உயர் பதவியை 2023 ஆம் ஆண்டு ரணில் ஜனாதிபதியாக இருந்தபோது, ஹேமரத்ன தேரருக்குரிய உத்தியோகபூர்வ (Credentials) சான்றிதழை அரச அனுசரணையுடன் வழங்கி வைத்தார்.

அப்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன தேரருக்குரிய விசிறியை (Vijinipatha) வழங்கினார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் முப்படைத் தளபதிகள் எனப் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

ஜனவரி மாதம் 27 ஆம் திகதி இந்த நிகழ்வு இடம்பெற்றது.

அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-

சமீபத்திய செய்திகள்