கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்குவதை தடுப்பதற்கு நடவடிக்கை

தித்வா சூறாவளி மற்றும் அண்மையில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலம் – மினுவாங்கொடை பிரதான வீதியின் நைகந்தை அடிவாரப் பகுதி கடுமையான வெள்ள பாதிப்புக்குள்ளானது. இதனால் வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக விமான நிலையம் நோக்கி பயணித்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் 5 மணித்தியாலங்களுக்கும் மேலாக போக்குவரத்து செய்ய முடியாமல் கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.

இவ்வாறானதொரு அனர்த்த நிலைமை மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் போது, குறித்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான பிரதான காரணங்களாக வீதிக்கு அருகிலுள்ள நிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மண் நிரப்புதல், வீதிக்கு மிக அருகில் உள்ள வடிகால் கால்வாய் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமை முக்கிய காரணங்களாக காணப்பட்டது. தித்வா சூறாவளிப் பாதிப்பின் போது அதிகளவிலான மணல் இக்கால்வாயில் தேங்கியுள்ளமை ஆகிய விடயங்கள் கண்டறியப்பட்டன. இதற்கான குறுகிய காலத் தீர்வாக, பாதிக்கப்பட்ட கால்வாய்களை உடனடியாக புனரமைப்பதற்கும், சட்டவிரோத மண் நிரப்பல்கள் குறித்து ஆராய்ந்து தகுந்த சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து தீர்மானிக்கப்பட்டது. மேலும், நீண்டகாலத் தீர்வாக வெள்ளப் பெருக்கினால் தொடர்ந்து பாதிக்கப்படும் இவ்வீதிப் பகுதிக்கு மாற்றீடாக, தூண்களின் மேல் அமைந்த நெடுஞ்சாலை ஒன்றை அமைப்பது குறித்து பரிசீலிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

மேலும், இக்கலந்துரையாடலில் விமான நிலைய முதன்மை மேலாளர் அருண ராஜபக்ஷ, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கேப்டன் தமிந்த ரம்புக்வெல்ல, கட்டானை பிரதேச செயலாளர், நகரசபை பிரதிநிதிகள் மற்றும் வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், சுற்றாடல், வானிலை அவதானிப்பு, நகர அபிவிருத்தி ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள், விமானப்படை மற்றும் ஸ்ரீலங்கா பொலிஸ் உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.