சிவனொளிபாதமலை யாத்திரை காலம் நிறைவு!

இந்த ஆண்டிற்கான (2026) வரலாற்றுச் சிறப்புமிக்க சிவனொளிபாதமலை புனித யாத்திரைக் காலம் நேற்று சனிக்கிழமை (30) நள்ளிரவுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளதாக சிவனொளிபாதமலை இராஜமஹா விகாரையின் ஸ்ரீபாதஸ்தானாதிபதி வண. பெங்கமுவே தம்மதின்ன தேர் அறிவித்துள்ளார்.

வெசாக் பௌர்ணமி புண்ணிய தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, சிவனொளிபாதமலை உடமழுவவில் தொடர்ச்சியான விசேட மத வழிபாடுகள் மற்றும் பூசைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

உடமழுவவில் நடைபெற்ற இறுதி மத வழிபாட்டுச் சடங்குகளைத் தொடர்ந்து, புனித தாதுக் கரண்டகம், சமன் தெய்வத்தின் திருவுருவச் சிலை மற்றும் தெய்வ ஆபரணங்கள் ஆகியன நான்கு வெவ்வேறு வீதிகள் ஊடாக பெல்மடுல்ல, கல்பொத்தவெல சிவனொளிபாதமலை இராஜமஹா விகாரைக்கு நேற்று நள்ளிரவு விசேட ஊர்வலம் மூலம் முறைப்படி எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இரத்தினபுரி வீதி வழியாக பயணித்த பிரதான வண்ணமயமான ஊர்வலம், சிவனொளிபாதமலை உடமழுவவிலிருந்து புறப்பட்டு இன்று (31) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கல்பொத்தவெலவில் உள்ள சிவனொளிபாதமலை இராஜமஹா விகாரையை சென்றடைந்துள்ளது.

புனித தாதுக் கரண்டகம், சமன் தெய்வத்தின் திருவுருவச் சிலை மற்றும் தெய்வ ஆபரணங்கள் அனைத்தும், அடுத்த ஆண்டுக்கான புதிய சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் ஆரம்பமாகும் வரை கல்பொத்தவெல விகாரையிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அங்கு தினசரி வழிபாடுகள் நடத்தப்படும் என வணக்கத்திற்குரிய தம்மதின்ன தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, கடந்த பல மாதங்களாக நாடளாவிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த இந்த ஆண்டிற்கான சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் பக்திப்பரவசத்துடன் நிறைவு பெற்றுள்ளது.