மதுரை மாநகராட்சியில் நடந்த சொத்துவரி முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்து உதவி ஆணையர் முதல் பில் கலெக்டர்கள் வரை 28 பேர் வரை சஸ்பெண்ட் செய்து மிக நேர்மையாக செயல்பட்ட ஆணையர் சித்ரா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது இந்த இடமாற்றம் மதுரை மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையராகவும், 71-வது மாநகராட்சி ஆணையராகவும் சித்ரா கடந்த 2025-ம் ஆண்டு பிப். 3-ம் தேதி பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற போது, மாநகராட்சி மிகப்பெரிய நிதி நெருக்கடியிலும், பல்வேறு நிர்வாக சிக்கல்களிலும் தவித்து வந்தது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2025 வரை 5 ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.
ஆணையர் சித்ரா, அனைத்து அரசியல் சூழ்நிலைகளையும் சமாளித்து ஒன்றரை ஆண்டுக்கு மேல் பணிபுரிந்ததோடு, வெறும் புகாரோடு நின்ற மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டை வெளிக்கொண்டுவந்து போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, மாநகராட்சி உதவி ஆணையாளர் முதல் பில் கலெக்டர்கள் வரை 28 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார். இந்த நடவடிக்கையானது மேயர், 5 மண்டல தலைவர்கள் பதவி பறிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அதோடு வணிக வரிக்கு பதிலாக குடியிருப்பு வரி செலுத்தி வருவாய் இழப்பு ஏற்படுத்தி வந்த 200 திருமண மண்டபங்களை கண்டறிந்து, அந்த கட்டிடங்களை வணிக வரிக்கு மாற்றி, மதுரை மாநகராட்சிக்கு 10 முதல் 13 சதவீதம் சொத்துவரி வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தார். மேலும், மாநகராட்சி பள்ளிகள் மேம்பாடு, சுகாதாரம், பொறியியல், வருவாய் பிரிவுகளில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளையும், முறைகேடுகளையும் கண்டறிந்து மாநகராட்சி வருவாயை பெருக்கினார்.
கிடப்பிலிருந்த முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம், வண்டியூர் கண்மாய் பூங்கா சுற்றுலா திட்டம், ராஜாஜி பூங்கா சீரமைப்பு போன்ற பல்வேறு புதிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கு துரித நடவடிக்கை எடுத்தார். தவெக ஆட்சிக்கு வந்தநிலையில் ஐஏஎஸ் அதிகாரிகள் தொடர்ச்சியாக மாற்றப்படும் நிலையில் நேர்மையாகவும், சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி ஆணையர் சித்ராவும், சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஆணையர் சித்ரா, அதிகாலையில் 6.30 மணிக்கு முன்னறிவிப்பு இல்லாமல் தினமும் ஏதாவது ஒரு வார்டில் தூய்மைப்பணி, குடிநீர் விநியோகம், மற்ற வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு செய்து வந்தார். ஆணையரே நேரடியாக வந்ததால் அதிகாரிகள், ஊழியர்கள் பணிக்கு சரியான நேரத்தில் வரத் தொடங்கினர். 2025, 2026-ம் ஆண்டுகளில் சித்திரைத் திருவிழாக்களில் சுவாமி வீதி உலா, தேரோட்டத்துக்கு முன்பும், பின்பும் குப்பையை அகற்றி மாநகராட்சி வரலாற்றிலேயே 24 மணி நேரமும் தூய்மைப்பணி மேற்கொண்டு சுகாதாரமான சித்திரைத் திருவிழா நடைபெற நடவடிக்கை எடுத்தார்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கும்போது மாநகராட்சி மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தையும், மனநலனையும் பரிசோதித்து சிகிச்சை, ஆலோசனை வழங்க மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார். சிறப்பு வரி விதிப்பு முகாம்கள், பாதாள சாக்கடை இணைப்பு முகாம்கள், குடிநீர் இணைப்பு முகாம்களை தனித்தனியாக நடத்தி இடைத்தரகர்கள் இன்றியும், லஞ்சம் வழங்காமலும் பொதுமக்கள் நேரடியாக, மனு வழங்கிய ஒரு வாரத்தில் இணைப்பு ஆணைகளை பெற்று பயனடைந்தனர்.
ஹைதராபாத் ‘டி ஒர்க்ஸ்’ சர்வதேச அறிவியல் மையம், இஸ்ரோவில் விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் அடித்தட்டு ஏழை மாணவர்களை அழைத்துச் சென்று அறிவியலை எட்டிப்பிடிக்க வாய்ப்பு ஏற்படுத்தினார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.





