சம்பியன்ஸ் லீக் கால்பந்து கொண்டாட்டம் வன்முறையாக மாறியது: பிரான்ஸில் 400க்கும் அதிகமானோர் கைது!

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்  கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஆர்சனல் அணியை வீழ்த்தி பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி சம்பியன் பட்டத்தை  வென்றதை தொடர்ந்து இவ்வெற்றியை கொண்டாடிய ரசிகர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பிரான்ஸ் முழுவதும் ஏற்பட்ட மோதல்களில் 400க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறைகளின் போது ஆறு வாகனங்கள், இரண்டு வணிக நிறுவனங்கள் மற்றும் ஒரு பேருந்து நிறுத்துமிடம் ஆகியவை சேதமடைந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பிரான்ஸ் முழுவதும் 416 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்களில் 280 பேர் பாரிஸ் நகரிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பிரான்ஸ் உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இந்த மோதல்களில் ஏழு அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள உள்நாட்டு அமைச்சர் லோரண்ட் நுனேஸ் இந்த வன்முறைச் செயல்கள் “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

தலைநகர் பாரிஸில் போக்குவரத்து மற்றும் ரயில் சேவைகளைப் பாதித்த இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படை அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர்  வெற்றி கொண்டாட்டங்கள் கொண்டாட்டங்கள் வன்முறையாக மாறி உயிரிழப்புகள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பி.எஸ்.ஜி அணி ஐரோப்பிய சம்பியன்ஷிப்பை வென்றபோது ஏற்பட்ட மோதல்களில் 17 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு இது தொடர்ச்சியான இரண்டாவது சம்பியன் வெற்றியாக அமைந்தாலும், கால்பந்து கொண்டாட்டங்கள் வன்முறையாக மாறியது இது இரண்டாவது முறையாகும்.

இறுதிப் போட்டி முடிவடைந்து பெனால்டி ஷூட்-அவுட் முறையில் பிரெஞ்சு அணியான பிஎஸ்ஜி வெற்றி பெற்ற சில நிமிடங்களிலேயே பாரிஸின் புகழ்பெற்ற ஷாம்ப்ஸ்-எலிஸே வீதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததோடு அங்கு மின்சார மிதிவண்டிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன், கடைகளின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதற்கிடையில், இந்த வன்முறை குறித்து எக்ஸ்  தளத்தில் பதிவிட்டுள்ள பிரான்சின் தீவிர வலதுசாரித் தலைவரான மரின் லெ பென் “ஒரு கால்பந்து கிளப்பின் வெற்றி கலவரத்தைத் தூண்டுவது பிரான்சில் மட்டும்தான் நடக்கிறது. வெற்றியின் போது வன்முறையைத் தவிர்ப்பதற்காக அனைவரும் தங்கள் வீடுகளுக்குள் பூட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயம் பிரான்சில் மட்டும்தான் ஏற்படுகிறது” என விமர்சித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், நடப்பு சம்பியன் பட்டத்தை வென்றுள்ள பிஎஸ்ஜி அணியின் வீரர்கள், ஈபிள் கோபுரத்திற்கு அருகிலுள்ள சாம்ப்-டி-மார்ஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ள விசேட வெற்றிப் பேரணியில் பங்கேற்கவுள்ளதுடன், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வழங்கும் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவுள்ளனர்.