ஹோர்முஸ் நீரிணை கடல்வழி வரி, நிரந்தர கட்டணங்களுக்கு கத்தார் எதிர்ப்பு

சர்வதேச எரிபொருள் மற்றும் வர்த்தகப் போக்குவரத்தின் மிக முக்கிய கடல்வழிப் பாதையான ‘ஹோர்முஸ் நீரிணையில்’ கப்பல்களுக்கு நிரந்தரப் பயணக் கட்டணங்களை விதிப்பது, உலகளாவிய நுகர்வோரை நேரடியாகப் பாதித்து விலைவாசி உயர்வை ஏற்படுத்தும் என்பதால் அதனை முற்றாக எதிர்ப்பதாக கத்தார் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிங்கப்பூரில் நடைபெற்ற ‘ஷாங்ரி-லா கலந்துரையாடல்’ பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய கத்தாரின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சருமான ஷேக் சவூத் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி இந்த விபரத்தை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“ஹோர்முஸ் நீரிணையில் இவ்வாறான கட்டணங்களை விதிப்பது உலகளாவிய விநியோகச் சங்கிலியில் கடுமையான பொருளாதாரப் தாக்கங்களை ஏற்படுத்தி, இறுதியாக நுகர்வோரையே பாதிக்கும் என்பதை கட்டாரும் அதன் பிராந்திய நட்பு நாடுகளும் தெளிவாகக் கூறியுள்ளன. எனவே, நாங்கள் இதனை எதிர்க்கிறோம். எனினும், கடல்வழிப் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு, ‘கடல் கற்சுரங்கங்களை அகற்றுதல்’ போன்ற தற்காலிக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் கட்டணம் வசூலிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாராக உள்ளோம்” என்றார்.

ஹோர்முஸ் நீரிணையின் கடல்வழிப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து ஈரான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த விவகாரம் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஓமனின் கடல்சார் பாதுகாப்பு மையம் தனது நாட்டு எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் மிதக்கும் ‘கடல் கற்சுரங்கம்’ என சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்றை கண்டறிந்து உத்தியோகபூர்வமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், அப்பகுதியால் பயணிக்கும் அனைத்து மீனவர்கள் மற்றும் வர்த்தகக் கப்பல்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் தணிந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் பதிவிட்டிருந்த போதிலும், கள நிலவரம் முற்றிலும் வேறாக உள்ளது. ஈரானின் துறைமுகங்களை இலக்கு வைத்து அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகை காரணமாக அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் மட்டம் இன்னும் தீவிரமாகவே காணப்படுகிறது. வர்த்தகக் கப்பல்கள் எவையும் முற்றுகைக் கோட்டைத் தாண்டக் கூடாது என அமெரிக்க மத்திய கட்டளைப் பீடம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி ட்ரம்ப் தனது பதிவில், “ஈரான் எவ்விதக் கட்டணமும் இன்றி நீரிணையைத் திறக்கவும், தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புகளை அழிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ஈரானிய ஊடகங்கள் இந்தத் தகவலை முற்றாக மறுத்துள்ளதுடன், பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டுமாயின் முடக்கப்பட்ட தங்களது 12 பில்லியன் டொலர் நிதியை அமெரிக்கா உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ளது. அத்துடன், ஹோர்முஸ் நீரிணையின் மீதான முழுமையான இறையாண்மையை ஈரான் பாராளுமன்றத்தின் ஊடாக சட்டப்பூர்வமாக்க ஈரான் தீவிரமாக முயன்று வருகிறது.

சமீபத்தில் ஈரானின் ‘பந்தர் அப்பாஸ்’ துறைமுகத்தின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானிய வான் பாதுகாப்புப் படையினர் தங்களது எல்லைக்குள் ஊடுருவிய அமெரிக்க-சீயோனிசக் கூட்டுக்குச் சொந்தமான ட்ரோன் (ஆளில்லா விமானம்) ஒன்றைச் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

மறுபுறம், சிங்கப்பூர் மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் , இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் மீண்டும் இராணுவ நடவடிக்கைகளைத் ஆரம்பிக்க பென்டகன் முழுமையாகத் தயாராக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.