இந்திய கடற்படைக் கப்பல் ஐராவத் கொழும்புக்கு விஜயம்

இந்திய கடற்படையின் சர்துள் ரக தரையிறங்கி கப்பல் 2026 ஜூன் 01-04 வரை கொழும்புக்கு விஜயம் மேற்கொள்கின்றது.

கப்பலுக்கான எரிபொருள் மற்றும் ஏனைய சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த விஜயம் மேற்கொள்ளப்படுகின்றது.

அத்துடன் இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவி திட்டத்தின் கீழ் இலங்கை கரையோரக் காவல் படைக் கப்பலான சுரக்‌ஷாவுக்கு தேவையான முக்கிய உதிரிப் பாகங்களும் இக்கப்பலில் எடுத்துவரப்பட்டுள்ளன.

இந்த விஜயத்தின்போது இக்கப்பலின் கட்டளை தளபதி ஐபி பட்டீல் அவர்கள் இலங்கை கடற்படையின் மேற்கு கடற்பிராந்திய தளபதி அவர்களை சந்திக்கவுள்ள அதேவேளை, இலங்கை கடற்படையுடனான உத்தியோக பூர்வ மற்றும் விளையாட்டு சார் ஈடுபாடுகளும் முன்னெடுப்படவுள்ளன.

மேலும் ‘கிளீன் ஶ்ரீலங்கா” திட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இலங்கை கடற்படையுடன் இணைந்து கடற்கரை தூய்மையாக்கல் சேவைகளிலும் இக்கப்பல் சிப்பந்திகள் ஈடுபடவுள்ளனர்.

இதே ரகத்தை சேர்ந்த ஐ.என்.எஸ் கரியால் 2025 டிசம்பரில் டித்வா அனர்த்தத்தின் போது 650 தொன்  உலர் நிவாரணப் பொருட்களுடன் இலங்கைக்கு வருகை தந்தமையை இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ளலாம்.

தொடர்ந்து இக்கப்பலில்  டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாலங்களை மீள்நிர்மாணிப்பதற்காக 2026 பெப்ரவரியில் 10 பெய்லி பாலத் தொகுதிகள் கொண்டுவரப்பட்டிருந்தன.

இலங்கைக்கு இந்தியக் கடற்படைக் கப்பல்கள் மேற்கொள்ளும் விஜயங்கள், இரு நட்பு நாடுகளினதும் கடற்படைகளுக்கும் இடையிலான வலுவான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் இலக்கை கொண்டவை.

இது இந்தியாவின்  அயலுறவுக்கு முதலிடம் என்ற கொள்கைக்கும், மாண்புமிகு பிரதமரின்  ‘பிராந்தியங்கள் முழுவதுக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம் (மகாசாகர்)’ என்ற தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றின் அடிப்படையிலானதாகும்.