பருத்தித்துறை கடலிலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நான்கு மீனவர்களை மீட்பதற்காக இந்தியாவின் உதவி, சர்வதேச கடலில் தேடுதல் உள்ளிட்ட அனைத்துவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல்வளங்கள் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
பருத்தித்துறை கடலில் மீன்பிடிக்கச் சென்று காணமல்போயுள்ள நான்கு மீனவர்கள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துவெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த சம்பவமானது மிகவும் வேதனையானதாகும். அதேவேளை தமது உறவுகளை காணாது தவிக்கும் குடும்பங்களுக்கு ஆறுதலையும் தெரிவிக்க விரும்புகிறேன்.
குறித்த மீனவர்கள் தொடர்பில் இலங்கை கடற்படையின் உதவியுடனும் ராடர் கருவிகளின் உதவியுடனும்; இலங்கை கடல் எல்லை பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையின் கடற்பரப்பு எல்லைகளில் மேற்கொண்ட தேடுதலில் குறித்த மீனவர்கள் எவரும் சிக்காத நிலையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் ஊடாக இந்திய கடல் எல்லைப் பரப்புக்களில் தேடுவதற்கான உதவியையும் அனுமதியையும் கேட்டுள்ளோம்.
அமைச்சு மட்டத்தில் மீனவர்களை தேடுவதற்கான அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடலில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதால் தேடுதல் பணிகள் தடைப்படாமல் இருப்பதற்கு கடற்படையின் பூரண ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது.
அமைச்சின் அதிகாரிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனத்தில் உள்ளனர்.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், ரஜீவன் மற்றும் எமது அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இவ்விடயத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.




