கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும், மாகும்புர பன்முகப் போக்குவரத்து மத்திய நிலையத்திற்கும் இடையிலான அதிவேக நெடுஞ்சாலை சொகுசு பஸ் சேவை இன்று திங்கட்கிழமை (01) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தைப் பயன்படுத்தும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மிகவும் திறமையான, வசதியான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை வழங்கும் நோக்கில் இந்த பஸ் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சு ஆகியவற்றின் வழிகாட்டலின் கீழ், விமான நிலைய மற்றும் விமானச் சேவைகள் நிறுவனம் மற்றும் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை ஆகியன இணைந்து இந்த சேவையை நடைமுறைப்படுத்துகின்றன.
பயணிகளுக்கு உயர்தர சேவையை வழங்குவதற்காக பஸ் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு விசேட பயிற்சித் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
பயணக் கட்டணம் ஒரு நபருக்கு 410 ரூபாய் மாத்திரமே அறவிடப்படும். பயண நேரமானது இந்த சொகுசு பஸ் சேவை மூலம் வெறும் 50 நிமிடங்களில் இலக்கைச் சென்றடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேவை நேரமானது காலை 5.15 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கு ஒருமுறை பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
இந்த பஸ் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம், பிரதான போக்குவரத்து மத்திய நிலையங்களுக்கு இடையிலான தொடர்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது இலங்கையின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும், நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளின் முன்னேற்றத்திற்கும் சாதகமான பங்களிப்பை வழங்கும் என அமைச்சு தெரிவித்துள்ளது.




