மனித உரிமை மீறல்களைத் தடுக்க மைக்ரோசொப்ட் அதிரடி நடவடிக்கை!

இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீனியர்களைக் கூட்டுப் பெருந்திரள் கண்காணிப்பு செய்வதற்குத் தனது கிளவுட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, மனித உரிமை கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கவுள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தின் உளவுப் பிரிவான ‘யுனிட் 8200’ பாலஸ்தீனியர்களின் மில்லியன் கணக்கான தொலைபேசி அழைப்புகளைத் திரட்டி, பகுப்பாய்வு செய்ய மைக்ரோசொப்ட்டின் ‘அசூர்’  கிளவுட் தளத்தைப் பயன்படுத்தியதாக ‘தி கார்டியன்’ ஊடகம் கடந்த ஆண்டு செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து, மைக்ரோசொப்ட் இது குறித்து விசேட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், இஸ்ரேலிய உளவுப் பிரிவு மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் சேவை விதிகளையும் நெறிமுறைகளையும் மீறியது கண்டறியப்பட்டதை அடுத்து, இஸ்ரேலிய இராணுவத்திற்கான கிளவுட் மற்றும் செயற்கை நுண்ணறிவு சேவைகளை மைக்ரோசொப்ட் நிறுவனம் ஏற்கனவே முழுமையாக இரத்து செய்துள்ளது.

மேலும் வியாழக்கிழமை (04) நிறைவடைந்த இந்த விசாரணையின் இறுதி அறிக்கையின்படி, மைக்ரோசொப்ட் பல அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது.

அதன்படி, வெளிநாட்டு அரசாங்கங்களால் பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்ட ஊழியர்களைக் கண்காணிக்கும் முறை மாற்றியமைக்கப்படும், போர் அல்லது மோதல்கள் நிலவும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் மனித உரிமை சார்ந்த தணிக்கைகள் பலப்படுத்தப்படும், தேசிய பாதுகாப்பு சார்ந்த புதிய வணிக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன்னர் கடுமையான சரிபார்ப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும் என அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

நிறுவனத்தின் இஸ்ரேலிய கிளையில் பணிபுரியும் சில ஊழியர்கள், நிறுவனத்தின் விதிகளை விட இஸ்ரேலிய இராணுவத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் மைக்ரோசொப்ட் இஸ்ரேல் நிறுவனத்தின் தலைமை அதிகாரி மற்றும் பல மூத்த மேலாளர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாடெல்லா உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கு இந்த உளவுத் திட்டம் குறித்து முன்னரே தெரிந்திருக்கவில்லை என நிறுவனம் விளக்கமளித்துள்ளது. எனினும், “மைக்ரோசொப்ட் நிறுவனம் பொதுமக்களைக் கண்காணிக்கும் எந்தவொரு தொழில்நுட்பத்தையும் வழங்காது” என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த புதிய மனித உரிமை கொள்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.