சர்வதேச விண்வெளி காற்று கசிவு: 5 விண்வெளி வீரர்கள் அவசரமாக பாதுகாப்பு விண்கலத்திற்கு மாற்றம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்பட்ட திடீர் காற்று கசிவு காரணமாக, ஐந்து விண்வெளி வீரர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டதோடு, அவர்களை பாதுகாப்பு விண்கலத்திற்குள் தஞ்சம் புகுமாறு நாசா உத்தரவிட்டுள்ளது.

தற்போது விண்வெளி வீரர்களுக்கோ அல்லது விண்வெளி நிலையத்தின் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கோ எந்தவித உடனடி ஆபத்தும் இல்லை என்று நாசா அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை (5) அதிகாலை விண்வெளி நிலையத்தில் உள்ள ரஷ்ய தொகுதியில் காற்று கசிவின் வேகம் திடீரென அதிகரித்ததை தொடர்ந்து அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நாசா ஊடகப் பேச்சாளர் பெத்தானி ஸ்டீவன்ஸ் இது குறித்துத் தெரிவிக்கையில்,

“விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஸ்பேஸ்எக்ஸ்  நிறுவனத்தின் ‘க்ரூ டிராகன்’ விண்கலத்திற்குள் நுழைந்து, விண்வெளி உடைகளை அணிந்து தயார் நிலையில் இருக்குமாறு ஐந்து விண்வெளி வீரர்களுக்கும் உத்தரவிடப்பட்டது.” என்றார்.

இந்த அவசர உத்தரவின்படி, நாசாவின் ‘க்ரூ-12’ திட்டத்தின் கீழ் உள்ள அமெரிக்க விண்வெளி வீரர்களான ஜெசிகா மேயர், ஜாக் ஹாத்வே, ஐரோப்பிய விண்வெளி முகமையின் பிரெஞ்சு விண்வெளி வீராங்கனை சோஃபி அடெனோட், ரஷ்ய விண்வெளி வீரர் ஆண்ட்ரே ஃபெட்யாவேவ் மற்றும் நாசாவின் மற்றுமொரு மூத்த விண்வெளி வீரரான கிறிஸ் வில்லியம்ஸ் ஆகிய ஐந்து பேரும் உடனடியாக க்ரூ டிராகன் விண்கலத்திற்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

மேலும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் ரஷ்யப் பகுதியான ‘ஸ்வெஸ்டா’ சேவைத் தொகுதியின் ‘  விண்கல இணைப்புப் பாதையிலேயே இந்த காற்று கசிவு ஏற்பட்டுள்ளது.

விண்வெளி நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதலே இந்த நுண் விரிசல்கள் கவலை அளித்து வரும் ஒரு காரணியாக இருந்து வருகிறது. வழக்கமாக நாளொன்றுக்கு சிறியளவில் இருந்த காற்று கசிவு வீதம், கடந்த திங்கட்கிழமை முதல் மேலும், இரட்டிப்படைந்தது.

இதனைத் தொடர்ந்து, நேற்று ரஷ்ய விண்வெளி வீரர்கள் அந்தப் பகுதியில் மிகவும் விரிவான பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். பழுதுபார்ப்பின் போது விண்வெளி நிலையத்தின் அழுத்தம் திடீரெனக் குறைந்து ஏதேனும் ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்கவே, நாசா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததாக தகவல் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து, விண்கலத்திற்குள் தஞ்சம் புகுந்திருந்த வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக விண்வெளி நிலையத்திற்குள் மீண்டும் திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. விண்வெளி நிலையம் விபத்து அபாயத்தில் இருந்து மீண்டுள்ள போதிலும், ரஷ்ய விண்வெளி முகமையான ரோஸ்கோஸ்மோஸுடன் இணைந்து இந்த விரிசல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண தொடர்ந்து உழைத்து வருவதாக நாசா தெரிவித்துள்ளது.