வருடாந்த பஸ் கட்டண திருத்தத்தை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்துமாறு தனியார் பஸ் சங்கங்கள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
நேற்று புதன்கிழமை (24) இந்த கோரிக்கை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
இதன்படி, அடுத்த ஐந்து நாட்களுக்குள் கட்டண திருத்தம் குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கெமுனு விஜேரத்ன மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மாத இறுதியில் டீசல் விலையை கருத்திற் கொண்டு, வருடாந்த பஸ் கட்டண திருத்தத்தை ஜூலை 05 ஆம் திகதி அமுல்படுத்துமாறு முன்னதாக அறிவித்திருந்தோம். எனினும், அனைத்து சங்கங்களுடனும் கலந்துரையாடி, அவர்களின் அனுமதியுடன், வழக்கம் போல் ஜூலை 01 ஆம் திகதி முதல் வருடாந்த பஸ் கட்டண திருத்தத்தை மேற்கொள்ளுமாறு எழுத்துப்பூர்வமாக அறிவித்தோம்.
அதேபோல், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் இந்த 5 நாட்களுக்குள் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது. தங்களது கட்டண விபரங்கள் அனைத்தையும் நாங்கள் வழங்கியுள்ளோம். எப்படியிருந்தாலும், ஜூலை மாத கட்டண திருத்தத்தில் 15 சதவீதத்திற்கும் அதிகமான சதவீத உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.





