ரவி , அர்ஜுன மகேந்திரன் உட்பட 11 பேருக்கு எதிரான வழக்கு ஜூலை 22 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவம் தொடர்பாக, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 11 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை வரும் ஜூலை 22ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் இந்த வழக்கு இன்று (26) வெள்ளிக்கிழமை  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது, இந்த வழக்கை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட வேண்டிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இதுவரை முறையாகக் கட்டமைக்கப்படவில்லை என நீதிபதி திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், வழக்கின் மேலதிக சட்ட நடைமுறைகளுக்காக இதனை ஜூலை 22ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மத்திய வங்கி பிணைமுறி ஏலத்தின் போது  முறைகேடுகளைச் செய்ததாகக் கூறி, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் 11 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பர்பசுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம் மற்றும் நிறுவன இயக்குநர்கள்அர்ஜுன் அலோசியஸ் மற்றும் ஜெப்ரி அலோசியஸ்  ஆகியோர் முக்கிய நபர்கள் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.