இலங்கையின் நெல் மற்றும் அரிசித் தொழில்துறையை முற்றிலுமாக வீழ்த்தி, விவசாயிகளை பாரிய சவால்களுக்கு முகம்கொடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தற்போதைய வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க முழுப் பொறுப்பேற்க வேண்டும் என தேசிய விவசாய ஒன்றியத்தின் தலைவர் அநுராத கோன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சர் லால்காந்த மற்றும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோர் தொடர்ந்து விவசாயிகளின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், அவர்களை அச்சுறுத்தும் வகையிலும் பேசி வருகின்றனர். விவசாயத் துறையும், விவசாயமும் அமைச்சர் லால்காந்தவின் பரம்பரைச் சொத்து அல்ல என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்தே விவசாயத் துறை அதிகாரிகளுக்கான சம்பளம் வழங்கப்படுகிறது.
ஏழை மக்களின் அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியின் மூலமே இந்த அரசாங்கம் இயங்குகிறது. எனவே நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதும், விவசாயிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தருவதும் அரசாங்கத்தின் கட்டாயக் கடமையாகும்.
கடந்த தமிழ் – சிங்கள புத்தாண்டுப் பண்டிகைக் காலத்தைக் காரணம் காட்டி, தேவையை விட மிக அதிகளவில் வெளிநாட்டு அரிசி அநியாயமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. வெறும் 3 அல்லது 4 நாட்கள் பண்டிகைக்காக ஒரு மாதம் முழுவதற்கும் மேலாக அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை என்ன?
இதன் பின்னணியில் அமைச்சர் வசந்த சமரசிங்கவின் மறைமுக பணப் பரிவர்த்தனைகள் ஒளிந்துள்ளன. தற்போதுள்ள சூழலில், இந்த அரசாங்கத்தில் உள்ள பெரும் கோடீஸ்வரராக வசந்த சமரசிங்க உருவெடுக்கும் சாத்தியம் உள்ளது. இது குறித்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கோ அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கோ சென்று முறையிடுவதில் பயனில்லை.
அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன், 20 கிலோ அரிசி வீதம் மக்களுக்கு வழங்குவதாக உறுதியளித்தனர். ஆனால் இப்போது அப்படி எதுவும் கூறவில்லை என பொய் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர். சமீபத்தில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வசந்த சமரசிங்க சமர்ப்பித்த சொத்து விபர அறிக்கையின்படி, அவரது மாத வருமானம் ஒரு கோடிக்கும் அதிகம் எனக் காட்டப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இருந்து அவருக்கு இவ்வளவு வருமானம் எங்கிருந்து வந்தது?. தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த 68 இலட்சம் மக்களுக்கு மட்டுமே இந்த அரசாங்கம் சொந்தமானது என்றும், அவர்களது தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர்கள் அகந்தையுடன் எண்ணக் கூடாது. அநுராதபுர பகுதி விவசாய மக்களின் பேராதரவோடு ஆட்சிக்கு வந்த வசந்த சமரசிங்க, தற்போதைய தவறான செயல்பாடுகளின் மூலம் விவசாயிகளை வஞ்சித்துள்ளார்.
அரசாங்கத்தின் திறமையின்மையையும், நிர்வாகத் தோல்வியையும் மூடிமறைக்க பெரு அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் மீது பழி சுமத்துவதை ஏற்க முடியாது. விவசாயிகளின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக உரிய முறையில் பாடம் புகட்ட விவசாயிகள் தயாராகி வருகிறோம் என்றார்.





