தேர்தலுக்கு முன்னர் மக்களே தங்களது பாதுகாப்பு என்றும், தமக்கு பாதுகாப்புப் படையினர் தேவையில்லை என்றும் கூறிய அமைச்சர்களை தற்போது பாதுகாப்பின்றி விவசாய மக்களிடம் அனுப்பினால், அவர்களைப் பற்றிய மக்களின் உண்மையான மனநிலையையும் விவசாய மக்களின் அதிருப்தியையும் நேரடியாக அறிந்து கொள்ள முடியும் என ஜனசேத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்தார்.
ஜனசேத பெரமுன கட்சியின் காரியாலயத்தில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
தற்போதைய அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் தேர்தலுக்கு முன்னர் விவசாயிகளின் பிரச்சினைகளை முன்னிறுத்தி வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர். விவசாய மக்களின் துயரங்களை தங்களுடைய துயரங்களாகக் காட்டி அரசியல் செய்தனர். விவசாயிகளின் உரிமைகளுக்காகப் போராடுவதாகக் கூறிய அவர்கள் இன்று ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் அதே விவசாய மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று நாட்டின் விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். ஒரு கிலோ நெல் விற்றுப் பெற்ற பணத்தில் ஒரு சவர்க்காரத் துண்டைக்கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சவர்க்காரத் துண்டின் விலை சுமார் ரூ.200 ஆக உள்ளது.
ஆனால் விவசாயிகளின் உற்பத்திகளுக்கு அந்தளவுக்கும் நியாயமான விலை கிடைப்பதில்லை. இந்நிலையில் விவசாயக் குடும்பங்கள் எவ்வாறு தங்களது அன்றாட வாழ்க்கையை முன்னெடுக்க முடியும்.
650 கிராம் அரிசி ஒரு குடும்பத்துக்கு போதுமானது என்ற வகையில் சில கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் 3 அல்லது 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் 650 கிராம் அரிசியில் எவ்வாறு வாழ முடியும். இந்தக் கருத்துக்கள் நடைமுறைக்கு முற்றிலும் முரணானவை.
அமைச்சர்கள் தங்களது வீடுகளில் அந்த அளவு அரிசியில் குடும்பத்தை நடத்த முடியுமா என்பதை முதலில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வசந்த சமரசிங்க, லால் காந்த மற்றும் நாமல் கருணாரத்ன உள்ளிட்ட அமைச்சர்கள் விவசாய மக்களின் கடும் எதிர்ப்பை தற்போது எதிர்கொண்டு வருகின்றனர். நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசியை முறையாகப் பொதியிட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திறன் நமக்குள்ளது.
இருப்பினும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. மாறாக, அரிசி இறக்குமதிக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது. இதன் பின்னணியில் இலாப நோக்குடைய அரசியல் இருப்பதாக மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகின்றது.
தேர்தலுக்கு முன்னர் தங்களுக்கு எந்தவித பாதுகாப்பும் தேவையில்லை, மக்களே தங்களது பாதுகாப்பு என்று கூறிய அமைச்சர்கள் இன்று பல அடுக்குகளான பாதுகாப்புகளுடன் செயற்படுகின்றனர். ஜனாதிபதி இந்த அமைச்சர்களை பாதுகாப்பின்றி விவசாய மக்களிடம் அனுப்பிப் பார்க்கலாம். அப்போது அவர்களைப் பற்றிய மக்களின் உண்மையான மனநிலையையும், விவசாயிகளின் அதிருப்தியின் அளவையும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என்றார்.





