கட்டாக்காலி நாய்களுக்கு உணவளிப்பது குறித்து பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

கட்டாக்காலி நாய்களுக்கு உணவளிப்பது மனிதாபிமானமான செயல் என்றாலும், அவற்றின் ஆரோக்கியம் மற்றும் நலனுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சஞ்சிக பெரேரா பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்மையில் அவர் வெளியிட்ட கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கமளித்துள்ள வைத்தியர் பெரேரா,

கட்டாக்காலி நாய்களுக்கு உணவளிப்பதை நிறுத்துங்கள் என நான் ஒருபோதும் கூறவில்லை. கட்டாக்காலி நாய்களுக்கு உணவளிப்பது கருணைமிக்க செயல். ஆனால், உணவு வழங்குவது மட்டுமே போதுமானதல்ல. அவற்றின் ஆரோக்கியமும் நலனும் உறுதி செய்யப்பட வேண்டும்.

கட்டாக்காலி நாய்களுக்கு தொடர்ந்து உணவளித்து பராமரிக்கும் நபர்கள், அவற்றுக்கு விசர்நாய் நோய் தடுப்பூசி செலுத்துதல், கருத்தடை மேற்கொள்ளுதல் மற்றும் தேவையான மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.

கட்டாக்காலி நாய்கள் தொடர்பான பிரச்சினைக்கு கருணை மட்டுமன்றி, பொறுப்புணர்வும் அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், தடுப்பூசி மற்றும் கருத்தடை திட்டங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் இலங்கையில் விசர்நாய் கடி நோயை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.South Asians & Diaspora

இலங்கையில் விசர்நாய்க்கடி நோயை ஒழிப்பதற்கு ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பும் இன்றியமையாதது.

நாட்டில் நிலவும் பிரச்சினையின் தீவிரத்தை சுட்டிக்காட்டிய அவர், ஒவ்வொரு ஆண்டும் 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நாய்க்கடி காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இதற்காக அரசுக்கு ஆண்டுதோறும் ரூ. ஒரு பில்லியனுக்கும் அதிகமான செலவு ஏற்படுகிறது.

மேலும், கடந்த ஆண்டு விசர்நாய்க்கடி நோயால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளில் சுமார் 30 சதவீதம் கட்டாக்காலி நாய்களுடன் தொடர்புடையவை.

இந்நிலையை கருத்தில் கொண்டு, கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்கையை மனிதாபிமான முறையில் கட்டுப்படுத்துவதற்கான தேசிய நாய் இனப்பெருக்க முகாமைத்துவ செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. விலங்குகளை பராமரிக்க விரும்பும் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தத் திட்டம் அமையும். அதன் மூலம் கருணைமிக்க சமூகத்தை உருவாக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.