நாட்டில் நெல் மிகை உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், எதிர்வரும் பெரும்போக பருவம் முதல் மொத்த நெற்செய்கையில் 25 சதவீதத்தை சம்பா மற்றும் கீரி சம்பா வகைகளாகப் பயிரிடுவதை கட்டாயமாக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. அதேவேளை, சிறுபோக அறுவடைக்கான நெல் கொள்முதல் உத்தரவாத விலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகளுக்கு நியாயமான விலையையும் நுகர்வோருக்கு கட்டுப்பாட்டு விலையில் அரிசியையும் வழங்குவதே அரசின் நோக்கமாகும் என்று வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மாத்தளையில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் நிலவும் நாடு நெல் மிகை உற்பத்தியை கட்டுப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் பெரும்போக பருவத்தில் இருந்து நாட்டில் மேற்கொள்ளப்படும் மொத்த நெற்செய்கையில் 25 சதவீதத்தை சம்பா மற்றும் கீரி சம்பா வகைகளாக பயிரிடுவதைக் கட்டாயமாக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
மேலும் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின்படி, நெல் அறுவடைக்கு பின்னர் காணப்படும் அனைத்து செலவுகளும் அறிவியல் ரீதியாகக் கணக்கிடப்பட்டுள்ளன.
இதில் தொழிலாளர் கட்டணம், வாகனச் செலவு, சாரதி ஊதியம் மற்றும் இதர செலவுகள் உள்ளடங்களாக கிலோ ஒன்றுக்கு 17 ரூபா செலவாகிறது.
தற்போது களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல் தொகைகளை அரிசியாக மாற்றுவதற்காக பதிவுசெய்யப்பட்ட 11 ஆலை உரிமையார்கள் தூரத்தின் அடிப்படையில் ஒரு கிலோ அரிசியை அரைப்பதற்கான செலவை 12 ரூபா முதல் 22 ரூபா வரை கணித்துக் கொடுக்க கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அம்பாறை, கிழக்கு மாகாணம், அம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் 2026 சிறுபோக அறுவடை சேகரிப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் உத்தரவாத விலையில் அரசாங்கம் நெல்லைக் கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளது. அதேபோல் தனியார் ஆலை உரிமையாளர்களும் அரசின் விலையிலேயே கொள்வனவு செய்ய உறுதியளித்துள்ளனர்.
கடந்த காலத்தில் நெல் கிலோ 90 ரூபா வரை குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால் ஏற்பட்ட விவசாயிகளின் போராட்டங்கள், அரசாங்கம் அறிவித்த நியாயமான உத்தரவாத விலையால் தற்போது தீர்க்கப்பட்டுள்ளன.
இச்சிறுபோக நெல் கொள்முதலுக்காக அரசாங்கம் 6,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதுடன், தேவைப்படின் நிலுவையிலுள்ள நெல்லை விற்பனை செய்து மேலதிக கொள்முதல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அமைச்சு தயாராகவுள்ளது.
விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதிசெய்வதோடு, கட்டுப்பாட்டு விலையை அதிகரிக்காமல் நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்குவது அரசின் முதன்மை நோக்கம் என்றார்.





