கொழும்பு துறைமுக நகரில் சீன பிரஜைகள் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இலங்கைக்கான சீன தூதரகம் கவனம் செலுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளை விரைவாக கண்டறிந்து, இலங்கையில் வசிக்கும் சீன பிரஜைகளின் தனிப்பட்ட பாதுகாப்பையும் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களையும் பாதுகாக்குமாறு இலங்கை பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் வசிக்கும் சீன பிரஜைகள் தங்களது பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும், அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக பொலிஸாரை தொடர்புகொள்வதுடன், உதவிகளுக்காக சீன தூதரகத்தையும் அணுகுமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் வியாழக்கிழமை (23) அதிகாலை சீன பிரஜைகள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்து தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
மேலும், இந்த மோதலின்போது மற்றுமொரு சீன பிரஜை ஒருவர் கடத்தப்பட்டதாக கிடைத்த தகவல் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


