பொதுமக்களுடன் வாக்குவாதம்: காவல் துறை உத்தியோகத்தர் பணி இடைநீக்கம்!

வத்துபிட்டிவலை முதலீட்டு வலய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உப காவல் துறை பரிசோதகர் ஒருவர், பொதுமக்களுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி சமூக ஊடகங்களில்  வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த  23 ஆம் திகதி காலை 10:45 மணியளவில் வத்துபிட்டிவலை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள தனியார் நிறுவனத்திற்கு முன்பாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சீருடையில் இருந்த குறித்த உப காவல் துறை பரிசோதகர், கடமையில் இருந்தபோது ஒரு காவல் துறை உத்தியோகத்தருக்குச் சிறிதும் பொருத்தமில்லாத வகையில் நடந்து கொண்டதுடன், பொதுமக்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு மிரட்டும் தொனியில் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த உத்தியோகத்தரின் இத்தகைய செயல் இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கும், அரச சேவைக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அமைச்சுசார் நிறுவன விதிக் கோவையின் கீழ் அவர் உடனடியாகப் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகள் இதுபோன்ற ஒழுங்கீனமான அல்லது பொருத்தமற்ற நடத்தைகளில் ஈடுபடுவதைக் சகித்துக் கொள்ள முடியாது என இலங்கை காவல் துறை  கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.