சனாதனம் என்ற சொல்லானது கடந்த சில நாட்களாக எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சொல்லுக்கான விளக்கம் என்ன? இது எதனை முன்னிறுத்துகிறது? யாருக்கானதாக இருக்கிறது? என்பன போன்ற கேள்விகள் மக்கள் மனதை உலுக்கிக் கொண்டி ருக்கின்றன. அதனை முழுவதுமாக விளக்க முடியா விட்டாலும் அதனுடைய அடிநாதத்தை, கருவையாவது தெரிய வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
‘சனாதனம்’ என்ற சொல்லுக்கு ‘நிலையானது’, ‘மாற்ற முடியாதது’, ‘தொன்மையானது’ போன்ற பொருள்கள் கூறப்படுகின்றன. இதனுடன் இணைந்து ‘தர்மம்’ என்ற சொல்லும் சொல்லப்படுகிறது. தர்மம் என்ற சொல்லுக்கான அர்த்தம் ‘மார்க்கம்’ அதாவது ‘வழி’ என்று கூறப்படுகிறது. அப்படிப் பொருள்படுமாயின் அது தொடங்கும் இடம் எது? என்கிற கேள்வி முன்னெழுகிறது.
இதனை ஆராய முற்படும்போது தர்மம் என்ற சொல்லானது வேத நூல்களில் ஆளப்படவில்லை என்றும், சமஸ்கிருத நூல்களில் அந்தச் சொல்லானது புத்தர் காலத்திற்குப் பிறகே புகழ்பெற்று விளங்கிற்று என்றும் ‘டெல்யூரி’ என்பார் குறிப்பிடுகின்றார்.
வேதச் செய்யுட்களில் ‘ரித’ என்னும் சொல்லே பயன்பட்டு வந்துள்ளது. இச்சொல் ‘பிரபஞ்ச சட்டம்’ என்று பொருள்படும். பிற்காலத்தில் வந்த புரோகிதர்களும், இலக்கணக் காரர்களும் ‘ரித’ என்னும் சொல்லுக்குப் பதில் ‘தர்மம்’ எனும் சொல்லைக் கையாண்டனர். காரணம் பௌத்தத்தைப் பின்தள்ளும் முயற்சி.
இது எவ்வாறு பௌத்தத்தைப் பின்தள்ளும் முயற்சியாகும் என்ற கேள்வி உங்களிடத்தில் எழுந்திருக்கும். பௌத்தம் பயன்படுத்திய ‘தம்மம்’ என்ற பாலி மொழிச் சொல்லைத்தான் சமஸ்கிருதச் சொல்லாக ‘தர்மம்’ என்று திரித்துக் கூறியுள்ளனர்.
இதன் மூலமாகப் பிராமணர்கள் எவ்வாறு திரிபு வேலையைச் செய்துள்ளனர் என்றும், பௌத்தத் தை எவ்வாறு புறந்தள்ளியுள்ளனர் என்றும் ஓரளவுக்கு விளங்கிக் கொள்ள முடியும்.
சனாதனம் எதனை முன்னிறுத் துகிறது என்ற கேள்விக்கு நாம் ஆட்படும்போது அது வேதங்களைக் கருவாகக் கொண்டுள்ளது. நான்கு வகை வேதங்களாவன, 1.ரிக், 2.யசூர், 3.சாமம், 4.அதர்வணம். இவை மனுஸ்மிருதியை மூலமாகக் கொண்டு உருபெற்றன. இந்த மனுவையே அடிப்படையாகக் கொண்டுள்ளது சனாதனம்.
இதனுடைய சொல்லாராய்ச்சியில் நாம் நுழையும்போது ‘ஸ்ருதி’ என்பதன் பொருள் கேட்டது. அதாவது கேட்கப்படுவது என்று பொருள் கொள்ளப்படுகிறது. ‘ஸ்மிருதி’ என்பதற்கு ‘நினைப்பது’ என்று பொருள்படுவதாக ஆன்மீகவாதி மு.பெ.சத்தியவேல் முருகனார் கூறுகின்றார்.
இதனை நாம் உற்று நோக்கும்போது பல ஆண்டுகாலமாக வாய்வழி யாகக் கேட்கப்பட்ட ஒன்றை நினைவில் வைத்துப் பின்பு எழுதி ஒரு கருத்தாக உருவாக்கினார்கள் என்ற உத்தேசத்திற்கு வர முடிகிறது. மு.பெ.சக்திவேல் முருகனார் சனாதனம் என்பதற்கு ‘தொன்மையானது’ என்ற விளக்கத்தினையும் கொடுக்கிறார். அப்படி இருக்கையில் இந்த சனாதனத்தின் அடிப்படை நூல்களாக சொல்வனவற்றை நாம் பார்க்க வேண்டியுள்ளது.
வேதங்களையும், மனுவையும் கொண்டு உருப்பெற்ற சனாதனம் பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம் முதலியவற்றையும் தன்னுடைய ஆதார நூல்களாகக் கொண்டுள்ளது. இதனை இவர்கள் 3000, 4000, 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறுகின்றனர்.
ஆனால் அதற்கான ஆதாரப்பூர்வமான சான்றுகள் என்பவை இன்று வரை கிடைக்கப் பெறவில்லை. இதன் மூலமாக இவர்கள் நிறுவவருவது என்னவெனில், அக்காலகட்டத்தில் இருந்து சனாதனம் என்பது மக்கள் மத்தியில் பின்பற்றப்பட்டு வந்துள்ளதாக, வரலாற்று உண்மை என ஏற்படுத்த முயலுகின்றனர்
அதனையே தற்போது வரை அவர்கள் செய்ய முயன்று கொண்டிருக்கின்றனர். அப்படி அவர்கள் அந்தப் பொய்யை எதற்காக பயன்பாட்டில் கொண்டுவர நினைக்கின்றனர்? அதில் கூறப்படும் தத்துவார்த்த கருத்து என்ன என்ற கேள்வி அதில் கூறப்பட்டுள்ள வர்ணாசிரம தர்மத்தில் கொண்டு போய்ச் சேர்க்கிறது. வர்ணாசிரமம் என்பது பிறப்பின் அடிப்படையில் மக்களைப் பிரிக்கிறது. அவனுக் கான தொழில்களையும், குணங் களையும் கூறுகின்றது. இதனையே அவன் செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறது.
வர்ண பிரிப்பு முறை – 1.பிராமணன், 2.ஷத்திரியன், 3.வைசியன், 4.சூத்திரன் என்று ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் வெளியிட்டுள்ள ‘ஸ்ம்ருதி முக்தாபலம்’ என்னும் நூலில் வர்ணாசிரம தர்மகாண்டம் என்னும் பகுதியில் கூறப்பட் டுள்ளது. இந்த வர்ணங்களானவை பிறப்பின் அடிப்படையில் பிந்தைய வர்ணத்தை விட முந்தைய வர்ணம் சிறந்தது என்னும் கோட்பாட் டினைக் கொண்டுள்ளது.
இயற்கையின் அடிப்படையில் எவ்வாறு இதனை ஏற்றுக்கொள்ள முடியும் என்ற கேள்வியை நாம் கேட்கும் போது அவர்கள் இது கடவுளின் பிரிப்பு முறை என்றும், கடவுளே இதனை நிறுவினார் என்றும் கூறுகின்றனர். இதனை ஆராய்ந்து பார்க்கும் போது நால்வருணத்தாருக்கான குணங்களையும், தர்மங்களையும் கிருஷ்ணர் கூறுவதாக பகவத் கீதையில் (41-44) வரையிலான செய்யுள் பகுதிகள் காட்டுகின்றன.
பிராமணர்கள் – மனதையும் வலி இந்திரங்களையும் அடக்குதல், பொறுமை, நேர்மை, சாஸ்திர ஞானம், வேதத்தில் நம்பிக்கை, அனுபவம் ஞானம் கொண்ட வர்களாக இருக்க வேண்டும்.
ஷத்திரியர்கள் – பராக்கிரமம், கீர்த்தி தைரியம், சாமர்த்தியம், யுத்தத்தில் பின்வாங்காமை, தானம் கொடுப்பது, செங்கோல் செலுத்துகிற சக்தி பெற்ற குணகருமங்களை கொண்டு உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
வைசியர்கள் – பயிரிடுவது, மாடுகளை ஏஷிக்கிறது, வியாபாரம் முதலிய குணங்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
சூத்திரர்கள் – ஏனைய மூன்று வருணத்தாருக்கும் ஊழியம் செய்யும் குணங்களை உடையவர்களாக இருக்க வேண்டும்.
பிறப்பின் அடிப்படையில் ஒருவனை உயர்வு தாழ்வு பிரித்து அதன் அடிப்படையில் அவனுக்கான தொழில்களை வகுப்பது என்பது எவ்வாறு ஏற்றுக்கொள்ளும்படி உள்ளது? அதிலும் சூத்திரர்கள் என்று சொல்லப்படுகின்றவர்களுக்கு மனுவும் ‘பிராமண ஸேவை ஒன்றே சூத்திரனுக்கு சிறந்த தர்மமாய்’ சொல்கிறது. இதனையே சனாதனம் முன்னிறுத்துகிறது.
இதனையே அவர்கள் நிலைநிறுத்த எண்ணுகின்றனர். இதன் அடிப்படையிலேயே மேல்கட்டு மானங்கள் கட்டப்படுகின்றன.
இதனை எதிர்த்து எவ்வித கேள்வியும் கேட்கக்கூடாது என்பதற்காக சொர்க்கம், நரகம் என்னும் பொய்யான தளங்களை உருவாக்கி வைத்துள்ளனர். சொர்க்கத்தினை அடைய நாம் மேற்கூறப்பட்ட குணங்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அவற்றை மீறிச் செயல்பட்டால் நாம் ஜீவனம் அடைய முடியாது. இதனை இவர்கள் ‘கர்மம்’ என்று கூறுகின்றனர்.
‘கர்மம்’ என்பது முற்பிறவியில் செய்த பயனின் மூலமாகவே இப்பிறவியாதலால், இப்பிறவியில் தங்களுக்கு என்ன தொழில் கொடுக்கப்பட்டுள்ளதோ அதை மட்டுமே செய்யவேண்டும். அப்படி இருக்கையில் சூத்திரன் என்பவன் சீடனாக இருக்கும் சமயத்தில், மற்ற மூன்று வர்ணத்தாரை வணங்கியும், நேர்மையாக இருந்தும், பயபக்தியுடன் மூவரணத்தாரையும் கும்பிட வேண்டும் என்று கூறுகிறது.
நவீன அறிவியல் யுகத்தில் ஒருவனுக்கு எவ்வித தகுதியும் இல்லை என்றாலும் அவனுடைய பிறப்பினை மட்டுமே அடிப்படையாக வைத்துக் கொண்டு அவனுக்கு பணிவிடை செய்வது என்பது ஏற்றுக் கொள்ளும்படி உள்ளதா என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதிலாக அமையும். அப்படி இருக்கையில் இது இக்கால கட்டத்திற்கு மட்டுமில்லாமல் எக்காலகட்டத்திற்கும் பொருந்தாத ஒன்றேயாகும். இதனை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சிலர் “இல்லை நால்வர்ணமும் சரிசமம் தான், அது பிரிவு தான்” என்று கூறுகின்றனர்.
“வேதாத்யானம் செய்யாமல் வேறு தொழில்களை செய்கிற பிராமணர் தானும் தன் சந்ததிகளும் ஒருங்கி இந்த ஜென்மத்திலேயே சூத்திரனாகிறான்”, என்று சமாதான தர்மத்தில் கூறப்பட்டுள்ளது. இக்கருத்தின் அடிப்படையில், பிராமணன் தனக்கான செயலை செய்யாமல் இருந்தால் அவன் சூத்திரன் ஆகிறான். அப்போது அங்கு சூத்திரன் என்பவன் என்னவாக முன்னிறுத்தப் படுகிறான் என்பது முக்கியம்.
அவனை ஒரு இழிவான பிறவியாகவே இங்கு இவர்கள் சித்தரித்துள்ளனர். நாம் சமகாலத்தில் எவ்வாறு சாதிப் பெயர்களைச் சொல்லி திட்டுகின்றோமோ அதனை ஒத்ததாகவே இதுவும் காணப்ப டுகின்றது. தற்போதுள்ள செயல்முறைக்கு அடிநாதமும் இதுவே. இப்படி இருக்கையில் எவ்வாறு இதனை உயர்வு தாழ்வு என்று எண்ணாதிருக்க முடியும் என்று தெரியவில்லை.
இவர்களுடைய உச்சமானது பெயர் சூட்டுவது வரை போய் நிற்கின்றது. நாள் வருணத்தாரும் இவ்வகையில் தான் பெயர் சூட்ட வேண்டும் என்று சனாதனம் கூறுகின்றது. பிராமணன் சந்தோஷமாகவும், க்ஷத்திரியன் ரசனைடனும, வைசியன் புஷ்டிப்பாகவும், சூத்திரன் ஊழியம் தொனிக்கி றதாகவும் இருக்க வேண்டும் என்று கூறுகின்றது. பெயர் வைப்பதற்கே இவ்வளவு கட்டுப்பாடுகள் என்றால் எவ்வாறு இவர்கள் படிப்பதை அங்கீகரிப்பவர்களாக இருப்பார்கள் என்று என்ன தோன்றுகிறது.
அதற்கான ஆய்வில் இறங்கும்போது அது மிகக் கொடூரமானதாக இருக்கின்றது. கல்வி என்பது அனைவருக்குமானது என்று நாம் கூறிக் கொண்டிருக்கையில், ஒரு தரப்பினருக்கு மட்டுமே அது சொந்தம் என்று கூறுகின்றது. அத்தோடு நின்றுவிடாமல் அதனையும் மீறி ஒருவன் கல்வி கற்றால் அவனுக்கான தண்டனைகளையும் சனாதனம் கூறுகின்றது. “சூத்திரன் வேதத்தை புத்தி பூர்விமாய் கேட்டால் அவன் காதுகளை உருக்கிய ஈயம், அரக்கு இவைகளால் நிரப்ப வேண்டும். வேதாக்ஷரத்தை உச்சரித்தால் நாக்கை செய்தி வேண்டும்”, என்று மனுவில் கூறப்பட்டுள்ளது (ஸ்ம்ருதி முக்தாபலம்). இதனுடைய நீட்சியே நாம் மகாபாரதக் கதையில் காணலாம். துரோணாச்சாரியார் ஏகலைவனின் கட்டைவிரலைக் காணிக்கையாகக் கேட்டதும், கர்ணனை தேரோட்டியின் மகன் எனக் கூறியதும் வருணாசிரம கோட்பாட்டின் மையமாக உருவானதே. அது நந்தனார் கதை வரை நீண்டு கொண்டே செல்கிறது.
இப்படிப் பல்வேறு படிநிலைகள், பிரிவுகள், கட்டுப்பாடுகள், தண்டனைகளைக் கொண்டுள்ள சனாதனம் எவ்வாறு இந்து மதம் என்ற பொதுதளத்திற்குள் வந்தது என்பது நீண்ட ஆய்வுக்குரியது. இருப்பினும் அதனை ஓரளவேணும் விளக்க முற்பட்டுள்ளேன். ராஜாராம் மோகன்ராய்தான் 1816-1817 காலகட்டத்தில் ‘இந்து மதம்’ என்ற சொல்லைப் பயன்படுத் துகின்றார்.
அதற்கு முன் வரை ‘வருணாசிரம தர்மம்’, ‘சனாதன தர்மம்’ என்பனவே இந்து மதத்தினை குறிக்க பயன்படும் சொற்களாக இருந்து வந்துள்ளன என்று கூறுகின்றார். இதனை வைத்துப் பார்க்கும் போது சனாதனத்தைப் பின்பற்றியவர்கள் யாராக இருந்திருப்பார்கள் என்ற கேள்வி எழுகின்றது. இந்த மனு, வேதம் முதலியவற்றினை இயற்றியவர்கள் ஆரியர்களாகவே இருக்கின்றனர். அப்படி இருக்கையில் ஆரியத்தின் எல்லையை மனு குறிப்பிடும்போது ஆரியத்தின் தெற்கில்லை என்று விந்திய மலையைக் குறிப்பிடு கின்றது. அப்படி இருக்கையில் எப்போது இந்த சனாதனம் தெற்கில் நுழைந்திருக்கும்? என்ற கேள்வியோடு எப்படி நுழைந்தி ருக்கும்? எவ்வாறு அது உருமாற்றம் பெற்றிருக்கும்? என்ற கேள்விக ளையும் நாம் முன்னிறுத்த வேண்டியுள்ளது.
இதன் வழியாகப் பார்க்கையில், “இந்திய அமைப்பில் முஸ்லிம்கள் நுழைந்த பிறகு ‘இந்து’ என்பவர்கள் உருவானார்கள்”, என்று எழுத்தாளர் பிரஜ் ரஞ்சன் மணி கூறுகின்றார்.
ஆய்வாளர் ரொமிலா தாப்பர் அவர்கள், இந்து மதம் ஒரு நவீன கட்டமைப்பு என்பதால் ‘சிண்டிகேட் இந்துயிசம்’ என்று குறிப்பிடு கின்றார். ஒருங்கிணை க்கப்பட்ட மதமாக இந்து மதம் விளங்கியதா என்ற கேள்வி இவரின் கூற்றின் மூலமாக எழுகிறது.
ஆங்கிலேயர்கள் இங்கு வந்த பின் அவர்கள் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் பௌத்தர்கள் சீக்கியர்கள் முதலானவவரை அடையாளம் கண்டுகொண்டனர். ஆனால் பல்வேறு கடவுளர்களை கும்பிட்டுக் கொண்டு தனக்கான தனித்தனி வழிபாடுகளைக் கொண்டுள்ள மக்களை இனம் காண முடியாமல் குழம்பினர். அவர்களை ஒன்றிணைக்கும் சொல்லாகவே ‘இந்து’ என்ற சொல் கூறப்பட்டுள்ளது.
இதனை மறுப்பினராக இருப்பின் மகா பெரியவா அவர்கள் எழுதிய தெய்வத்தின் குரல் முதல் தொகுதியில் உள்ள 413 ஆம் பக்கத்தினை காணவும். அதில் அவரே இந்து என்ற சொல் ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்டது என்கிறார்.
இந்து என்ற சொல்லாட்சியானது எதன் காரணமாக உருவானது அது எவ்வாறு இங்கு உள்ள வழிபாடுகளையும் நாட்டார் வழிபாடுகளையும் தனதாக்கிக்கொண்டது என்பது மேலாய்வுகளுக்கு உட்பட்டது.
இந்து என்பது இன்றுவரை தொடர்ந்து பல்வேறு பரிமாணங்களில் நீடித்துக் கொண்டே வருகின்றது. அரவிந்தர் தேசியம் குறித்துப் பேசும்போது தேசியம் என்பதைக் கடவுளிடமிருந்து வந்துள்ள ஒரு மதம் என்றும், ஆரிய வர்தத்தின் தெய்வீகம் என்றெல்லாம் குறிப்பிடுகின்றார். அத்தோடு நின்றுவிடாமல் “நாம் தேசியவாதியாக மாற வேண்டும் என்றால் மதநிலையை அடைய வேண்டும்” என்றும் கூறுகின்றார். இந்தியா விரிவடையும் என்றால் சனாதாரண தர்மம் விரிவடையும் என்று கூறுகின்றார்.
இவ்வாறு இவர்களுடைய கருத்தாக்கத்தினை நாம் ஓரளவேனும் புரிந்துகொள்ள இயலும். தாங்கள் வகுத்துக்கொண்ட ஒரு கொள்கையை, அதுவும் தங்களுக்கான கொள்கையை இவர்கள் எவ்வாறெல்லாம் மற்றவர்கள் மீது பல்வேறு வழிமுறைகளில் கடவுளின் பெயர்களால் திணித்து இருக்கின்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்து என்பது ஒரு தரப்பினரு க்கான மதமாக இல்லை என்பதும், அதில் பல்வேறு வழிபாட்டு முறைகளைக் கொண்டுள்ள வெவ்வேறு மக்கள் உள்ளடக்கப் பட்டுள்ளார்கள் என்பதும் இதன் மூலமாகத் தெளிவாகின்றது. இவர்கள் இப்போது கூறிக் கொண்டிருக்கக்கூடிய இந்து என்ற சொல் அனைத்துத் தரப்பு மக்களுக்கான சனாதானத்தினை அடிப்படையாக ஒட்டி அமைந்ததில்லை என்பது நிரூபணமாகிவிட்டது.
இதுவரையில் நாம் பார்த்ததில் பெண்கள் என்பவர்கள் இடம் பெறவேயில்லை. அவர்களுடைய பங்கு என்ன என்று பார்க்கையில், கணவனுக்குப் பணிவிடை செய்தல், ஏதேனும் ஒரு ஆணின் துணையுடன் மட்டுமே இருக்க வேண்டும், ஒரு கணவன் எவ்வளவு கொடியவன் ஆகவும் இழிவானவனாகவும் ஏன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டுள்ளவனாகவும் இருப்பினும் அவனை மதித்து அவனுக்கு மனைவியானவள் பணிவிடை செய்ய வேண்டும், படிக்கக் கூடாது, உடன்கட்டை ஏறுதல், நால்வர்ணத்தாருக்கும் தொண்டு புரிய வேண்டும் என கூறுகிறது.
சமகாலத்தில் ஆண்களுக்கு இணையான அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பயணித்துக் கொண்டிருக்கும் இத்தகைய சூழ்நிலையில் சனாதனம் கூறும் வழிமுறைகளை எவ்வாறு ஏற்று நடக்க முடியும்? மனிதன் வாழ்வதற்கு ஒவ்வாத செயல்களைக் கொண்டுள்ள கருத்துக்களை எப்படி அடிப்படையாக வைத்துச் செயலாற்ற முடியும்?
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை கூற முடியாததாகவே உள்ளது. இவ்வகையில் சனாதனத்தினை இப்படி அனைவருக்குமான கொள்கையாக அவர்கள் முன்னிறுத்துகையில் அதனை நாம் புறக்கணிப்பதே சாலச் சிறந்தது.
கட்டுரை
-வெ.அய்யனார்,
முதுகலை இரண்டாமாண்டு,
தமிழ் இலக்கியத்துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்.
துணைநூற்பட்டியல்:
1.சனாதன தர்மம் – நாராயணன் – 1905 பதிப்பு
2.சனாதன தர்மம் – நாராயணன் – 1907 பதிப்பு
3.ஸ்ம்ருதி முக்தாபலம் – ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்
4.தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும் – கே.கே.பிள்ளை
5.விகடன் கட்டுரை. 15.08.2017
6.தெய்வத்தின் குரல் – மகா பெரியவா




