காலி சிறைச்சாலையில் இரண்டு கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இன்று திங்கட்கிழமை (27) நீதிமன்றில் அறிவிக்கவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான காமினி பீ.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற மோதலில் காலி சிறைச்சாலையில் இருந்து நான்கு கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
காயமடைந்த கைதிகளில் இருவர் காலி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர், மற்றைய இருவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் கருத்து தெரிவிக்கையில், இரு குழுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, அது பெரும் கைகலப்பாக மாறியது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அஹுங்கல்ல ‘லோக்கு பெட்டி’ மற்றும் கரந்தெனிய சுத்தா ஆகிய இரு குழுக்களுக்கு இடையில் இந்த மோதல் இடம்பெற்றதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



