மாற்றத்தை உருவாக்குபவர்களாக, ஒளிமயமான எதிர்காலத்தை வடிவமைக்கும் பொறுப்பும் வாய்ப்பும் நமக்கு காணப்படுகின்றது. கட்சி குறித்த எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பாக நாம் மீள சிந்திக்க வேண்டும். பழைய கோட்பாடுகளுக்கு அப்பால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கக் கூடியவாறு புதிதாக சிந்திக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்காக கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மாற்றத்தை உருவாக்குபவர்களாக, ஒளிமயமான எதிகாலத்தை வடிவமைக்கும் பொறுப்பும் வாய்ப்பும் நமக்கு காணப்படுகின்றது. கட்சி குறித்த எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பாக நாம் மீள சிந்திக்க வேண்டும். உலகம் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
நாட்டு மக்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளனர். மக்கள் துணிச்சலான நடவடிக்கைகளைக் கோரி, நாட்டைப் பலப்படுத்தும் பயணத்தில் பெரும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். இந்த தருணத்தில் பழைய கோட்பாடுகளை நம்பி இருக்க முடியாது.
பழைய கருத்துக்களில் சில முக்கியமான நேர்மறையான அம்சங்கள் இருந்தாலும், அனைத்தும் நொடிக்கு நொடி மாறி வருகின்றன. அறிவும் மூலோபாயங்களும் மாறி வருகின்றன. அரசியல் நிபுணர்கள் மற்றும் அரசியல்வாதிகளை விட மக்கள் வித்தியாசமாக முடிவுகளை எடுக்கின்றனர். அவர்கள் எல்லாவற்றிலும் பங்கேற்று செயலிலும் முடிவெடுப்பதிலும் நேரடியாக பங்களிக்கிறார்கள்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற தவறால் பெரிய இடைவெளியொன்று உருவாகியுள்ளது. அந்த இடைவெளியை நிரப்ப வேண்டுமானால் அதிகாரத்தில் இருப்பவர்களை விட நாம் அதிகம் சிந்திக்க வேண்டும். இது பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாகக் காணப்பட வேண்டும்.
புதிய உபாயங்களை வகுத்து செயற்படுவது மிகவும் அவசியமாகும். போட்டிகளுக்கு அப்பால் சென்று மக்களுடன் சுமூகமான உறவைப் பேண நாம் வித்தியாசமாக சிந்திக்க வேண்டும். மக்கள் முடிவெடுப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்க, இரண்டாவது பொது மன்றம் குறித்து உலகமே பேசி வருகிறது. சில நாடுகளில் இவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
சமூகத்தில் இது குறித்து பேச்சு நடந்து வருகிறது. பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த பின்னர் அவற்றை நிறைவேற்றாத திறமையற்ற மக்கள் பிரதிநிதிகளை மீள அழைக்கும் அரசியலமைப்பு குறித்து சிந்திக்க வேண்டும்.
மக்களோடு தொடர்புகளை ஏற்படுத்த, வாக்காளர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். பீனிக்ஸ் பறவை போல் சாம்பளில் இருந்து மீண்டெழு வேண்டும். மறுபரிசீலனை செய்வது, புதிதாக சிந்திப்பது, ஆக்கப்பூர்வமான யோசனைகள் மூலம் முன்னோக்கி பயணிக்க வேண்டும்.
நாம் ஓரு திருப்புமுனையை சந்திக்க வேண்டும். கட்சியின் எதிர்காலம் மற்றும் புதிய மூலோபாயம் குறித்தும் நாட்டின் எதிர்கால அபிவிருத்தி குறித்தும் நாம் புதிதாய் சிந்தித்து பணியாற்ற வேண்டும் என்றார்.



