மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த மூத்த தலைவரே சேனாதிராஜா என்று தென்னிலங்கைத் தலைவர்கள் தெரிவித்தனர். மாவை.சோ.சேனாதிராஜாவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் ஞாயிற்றுக்கிழமை (2) கலந்து கொண்டு அஞ்சலி உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபயவர்த்தன தெரிவிக்கையில், மாவை.சேனாதிராஜாவின் இறுதி நிகழ்வில் வருகை தந்திருக்கும் மக்கள் கூட்டத்தினைப் பார்க்கின்றபோது, அவர் தமிழ் மக்களுக்காக எவ்வளவு தூரம் பணியாற்றியிருக்கின்றார் என்பது மிகத்தெளிவாக தெரிகின்றது.
அதுமட்டுமன்றி, அவருடன் பாராளுமன்றத்தில் இணைந்து செயற்பட்ட காலத்தினை நான் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவு கூருவதுடன், அவர் எமது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மிக நெருக்கமாகச் செயற்பட்ட ஒருவராகவும் உள்ளார்.
மாவை.சேனாதிராஜா எப்போதும் மக்களின் பிரச்சினைகளுக்காக குரல்கொடுக்கும் அதேநேரம், அவர்களின் அபிலாஷைகளை பெற்றுக்கொடுப்பதற்காகவே இறுதி வரையில் செயற்பட்ட ஒருவராகவும் உள்ளார் என்றார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவிக்கையில்,
சேனாதிராஜாவின் மறைவானது தமிழ்த் தேசியம் என்ற தொடருந்தின் இறுதிப்பெட்டியாக இருப்பது போன்ற கருத்து நிலை எனக்குள் உள்ளது. மாவை.சேனாதிராஜா இறுதியாக என்னுடன் சம்பந்தன் அவர்களின் இறுதி அஞ்சலி உரையினை மையப்படுத்தி உரையாடினார். அப்போது அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சுட்டிக்காட்டி அரசியல் தீர்வு விடயத்தில் சம்பந்தன் கொண்டிருந்த நம்பிக்கையை வீணடித்து விட்டீர்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்.
அதனைத்தொடந்து சேனாதிராஜா என்னை தொடலைபேசியில் அழைத்து உரையாடியதோடு நீங்கள் சொன்ன விடயம் மிகவும் முக்கியமானது. மிகச் சரியானது என்று கூறி உரையாடினார். அவர் எப்போதும் மென்மையான பக்குவமான தலைவராகவே இருந்தார்.
வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள், மலையக மக்கள் உள்ளிட்ட அனைவரையும் உள்ளடக்கியது தான் இலங்கைத் தமிழ்த் தேசியம் என்பதில் உறுதியாக இருந்தார். அவருடைய கூற்று மிகவும் உண்மையானது.
வடக்கு,கிழக்கில் தமிழ்த் தலைவர்கள் பலமாக இருக்கும்போது தான் தென்னிலங்கையில் தமிழ் மக்களுக்காக செயற்படும் நாம பலமாக இருக்க முடியும். ஆகவே அவருடைய தீர்க்கமான சிந்தனையை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவிக்கையில்,
நான் எந்தவொரு மரணச்சடங்கிள் இறுதி நிகழ்விலும் கலந்து கொள்வது கிடையாது. ஆனால் மாவை.சேனாதிராஜா ஐயா அவர்களின் நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என்பது என்னால் உணரப்பட்டது.
அவர் எப்போதும் மலைய மக்களின் உரைமைக்காக குரல் கொடுத்தவர் என்பதோடு எனது தந்தையார் மறைந்த ஆறுமுகன் தொண்டமானுடன் மிக நெருக்கமாகச் செயற்பட்டவராக இருந்தார்.
அதுமட்டுமன்றி, நான் அமைச்சராக பணியாற்றிய காலத்தில் வடக்கு மக்களின், கிழக்கு மக்களின் நீர்ப் பிரச்சினை பற்றி உரையாடுவதற்காக என்னைச் சந்திக்க வேண்டும் என்று அடிக்கடி கேட்டுக்கொள்வார். அவர்களின் பிரச்சினைகள் பற்றிய விளக்கத்தினையும் அளிப்பார்.
அவ்விதமாக மக்களுக்காக பணியாற்றிய ஒருவர் இப்போது எம்மை விட்டுச் சென்றுள்ளமையானது மிகப்பெரும் இழப்பாகும் என்பதோடு அவரை மரியாதை செய்து எமது கட்சி ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கின்றது என்றார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியூதீன் தெரிவிக்கையில்,
மாவை.சேனாதிராஜா புத்தளத்தில் முஸ்லிம்கள் அகதிகளாக தங்கியிருந்த காலத்தில் இருந்து என்னுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தார்.
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்காக நடவடிக்கைகளை முன்னெடுத்தபோது அதற்கான தனது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக என்னிடத்தில் நேரடியாகவே தெரிவித்து வந்தார்.
அத்துடன், எப்போதும், தம்பி என்று அழைத்து பல்வேறு விடயங்கள் பற்றி உரையாடினாலும் அவருடைய சிந்தனை மக்களை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும் என்றார்.



