தேங்காய் ஏற்றுமதி செய்வதற்கு இடையூறுகள் காணப்படுகின்றன. குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கில் மக்களுக்குச் சொந்தமான காணிகளை படையினர் இன்னும் விடுவிக்கவில்லை. புதிய ஆட்சியின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு சில இராணுவ முகாம்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் இன்றளவில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள், மக்களின் வாழ்வாதார நிலங்கள் படையினரின் வசமே உள்ளன. தமிழர்களை அவர்களின் சொந்த வாழிடங்களில் வாழவிடுங்கள் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (5) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
பூர்வீக நிலங்களை இழந்து அகதிகளாக இடைத்தங்கல் முகாம்களிலும், உறவினர்களின் அரவணைப்பில் எம் மக்கள் வாழ்கிறார்கள்.
போர் மௌனித்து பதினைந்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் இன்னமும் அகதிகளாக நாட்டின் குடிமக்கள், தமிழ் மக்கள் வாழும் அவல நிலையை பற்றி எண்ணிப் பாருங்கள். தமிழர்களை அவர்களின் சொந்த வாழிடங்களிலேயே வாழவிடுங்கள்.
இவற்றில் ஒன்றாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கேப்பாப்பிலவு, புதுக்குடியிருப்பு மக்களின் அவலநிலை இன்னும் தீரவில்லை. அதிலிருந்து மீண்டவர்கள் சிலர். இன்னும் 54 குடும்பங்கள் தங்களைத் தங்களுடைய பூர்வீக இடத்தில் குடியமர்த்த மாட்டார்களா என்ற ஏக்கத்தோடு இடைத்தங்கல் முகாம்களில் இருந்து பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
தங்களுடைய சொந்த இடத்தில் இருந்தபோது எந்தக் குறையும் தங்களுக்கு இல்லை. வளமான பூமி, ஒருபக்கம் ஆறு, அதனால் மீன், இறாலுக்கு பஞ்சமில்லை. தங்களுடைய காணியில் குடியிருப்பு நிலம் தவிர்ந்த மிகுதி நிலத்தில் காலங்களுக்கேற்ப பயன்தரக்கூடிய தோட்டச்செய்கை, வயல்கள், இதுதவிர தென்னைகள் தாராளமாக ஒவ்வொரு காணிகளிலும் உண்டு. இன்றைய தேங்காயின் விலை மிகமிக அதிகம். எண்ணிப் பாருங்கள்… மக்கள் எவ்வளவு வேதனைப்படுவார்கள்!
இப்படி சகல விதத்திலும் தங்களின் பூர்விக காணிகளில் பயன் பெற்று வாழ்வாதாரத்தை ஈடு செய்து வாழ்ந்து வந்த குடும்பங்கள் தற்போது மிகவும் நொந்துபோயுள்ளார்கள். நான் ஏற்கனவே குறிப்பிட்ட 54 குடும்பங்களின் 55 ஏக்கர் நிலம் விடுபடாமல் இராணுவம் அபகரித்துவைத்துள்ளது. இதில் சில காணிகள் பலத்த நில மீட்புப் போராட்டங்களின் பின்புதான் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டன.
அதேபோல அந்த மக்களின் பிரதிநிதியாகக் கேட்கின்றேன். 54 குடும்பங்களின் காணிகளையும் விடுவிப்பு செய்யுங்கள். பொறுப்பாக இருக்கும் அமைச்சுக்கள் இந்த மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.





