இலங்கையின் ஜனநாயகத்தின் மீள் தன்மையை ஜனாதிபதித் தேர்தல் உறுதிப்படுத்தியுள்ளதுடன் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மேலும் சீர்திருத்தங்களை ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் செயல்படுத்துவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். தற்போதுள்ள நிலையில், இலங்கையை ஆதரிக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராக உள்ளதென ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு தூதுக்குழுவின் தலைமைக் கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் அமோர் தெரிவித்தார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம 21 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் குறித்த தனது இறுதி அறிக்கையை ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புத் தூதுக்குழு இன்று வெள்ளிக்கிழமை (17) வெளியிட்டது.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதித் தேர்தல் குறித்த இறுதி அறிக்கையை வெளியிட்டு வைத்து உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு தூதுக்குழுவின் தலைமை கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் அமோர்,
“ ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிக்கையானது நாடு தழுவிய ரீதியில் 9 மாகாணங்களிலும் முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பை அடிப்படையாகக் கொண்டது. இரண்டு மாத காலத்தில் இந்த அறிக்கை பூரணப்படுத்தப்பட்டது. முழு தேர்தல் செயல்முறையின் விரிவான பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டை இந்த அறிக்கை வழங்குகிறது.
இந்த அறிக்கையின் ஒரு பகுதியாக, ஜனநாயகத் தேர்தல்களுக்கான இலங்கையின் சர்வதேச உறுதிப்பாடுகளுக்கு ஏற்ப, எதிர்கால தேர்தல் செயன்முறைகளை வலுப்படுத்துவதையும் செம்மைப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட 16 பரிந்துரைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
இலங்கையின் ஜனநாயகப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லையும் அறகலய போராட்டத்திற்கு பின்னரான அரசியல் இயல்புநிலையை மீட்டெடுத்தமையையும் 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் குறித்து நிற்கின்றது.
பொதுமக்கள் ஜனநாயக செயல்முறைக்கான தங்கள் அர்ப்பணிப்பை இதன்போது வெளிப்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து முக்கிய தேர்தல் கால கட்டங்களிலும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்துள்ளது.
தேர்தல் காலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவானது சுயாதீனமாகவும் உறுதியுடனும் செயல்பட்டது. தேர்தல் அமைதியாக இடம்பெற்றமையும் வேட்பாளர்கள் முடிவுகளை ஏற்றுக்கொண்டமையும் இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களின் சக்தியை அடிக்கோடிட்டுக் காட்டியது.
தேர்தல் பிரச்சார நிதியில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இளைஞர்களை அதிக அளவில் இணைப்பது உள்ளிட்ட பல சிறந்த முன்னேற்றங்களை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
ஒட்டுமொத்தமாக, தேர்தல் சட்ட கட்டமைப்பு நன்கு வளர்ச்சியடைந்துள்ளதாகவும், தேர்தல் ஆணைக்குழு மற்றும் சிவில் சமூகத்தின் கூட்டு ஈடுபாடு தேர்தலுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளமை அறிக்கையின் மூலம் தெளிவாக காணக்கூடியதாக உள்ளது.
தேர்தல் பிரச்சார காலங்களில் அடிப்படை சுதந்திரம் மதிக்கப்பட்டதுடன் வாக்காளர்கள் தங்களது விருப்பத்திற்கமைய வேட்பாளர்களை தெரிவு செய்ய உண்மையான அரசியல் மாற்று வழிமுறைகளைக் கொண்டிருந்தனர்.
இலங்கையின் ஜனநாயகத்தின் மீள்தன்மையை ஜனாதிபதித் தேர்தல் உறுதிப்படுத்தியுள்ளதுடன் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மேலும் சீர்திருத்தங்களை ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் செயல்படுத்துவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். தற்போதுள்ள நிலையில், இலங்கையை ஆதரிக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராக உள்ளது.
அரசியலில் பெண்களின் பங்கேற்பை அர்த்தமுள்ள வகையில் மேம்படுத்துவதையும், அரச வளங்களை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக அமுலாக்க வழிமுறைகளை வலுப்படுத்துவதையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுதி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நிகழ்நிலை காப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாட்டுச் சட்டங்களை ரத்து செய்வதன் மூலம் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான அணுகலை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை மேலும் வலியுறுத்தவும் இந்த அறிக்கை அழைப்பு விடுக்கிறது.
இதேவேளை, வெளிப்படைத்தன்மை மற்றும் கருத்துசு் சுதந்திரத்தின் மூலம் ஜனநாயகம் செழித்து வளர்கிறது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு தூதுக்குழுவின் தலைமை கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் அமோர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைத் தேர்தல் ஆணையக்குழுவினால் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 முதல் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை நாட்டில் தேர்தல் கண்காணிப்பு கடமைகளில் ஈடுபட்டது. இது நாட்டின் 9 மாகாணங்களிலும் 70 க்கும் மேற்பட்ட சர்வதேச கண்காணிப்பாளர்களை நியமித்து கண்காணிப்பு கடமைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.