இரவுநேர களியாட்ட விடுதிகளுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்படும் இளைஞன் ஒருவன் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கடந்த திங்கட்கிழமை (07) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் பிலியந்தலை, மடபாத, தம்பே சந்திக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் பிலியந்தலை, மடபாத பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய இளைஞன் ஆவார்.
சந்தேக நபரான இளைஞனிடமிருந்து 50 கிராம் கொக்கேயின், 20 கிராம் குஷ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 20 இலட்சம் ரூபா ஆகும். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


