புத்தரின் புனித சின்னங்கள் கங்காராம விகாரையில் தரிசனத்திற்கு வைப்பு

இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ள புத்தரின் புனித சின்னங்களை, கொழும்பு கங்காராம விகாரையில் பொதுமக்களின் தரிசனத்திற்காக வைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விசேட தரிசன வழிபாட்டுக்கான ஆரம்பக்கட்ட திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஞாயிற்றுக்கிழமை (18) மாலை கங்காராம விகாரைக்கு விஜயம் செய்தார்.

கங்காராம விகாரையின் வளாகத்தை நேரில் பார்வையிட்ட அமைச்சரல், ஏற்பாடுகள் குறித்து விகாராதிபதி கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரருடன் கலந்துரையாடினார்.

எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி புத்தரின் புனித சின்னங்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ளதுடன், பெப்ரவரி 11 ஆம் திகதி வரை கங்காராம விகாரையில் பொதுமக்கள் வழிபாடுகளுக்காக வைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

விகாரைக்கு விஜயம் செய்த அமைச்சர் முதலில் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் விகாராதிபதியிடம் ஆசி பெற்றார். அதனைத் தொடர்ந்து, புனித சின்னங்கள் வைக்கப்படவுள்ள இடம் மற்றும் பக்தர்கள் வரிசையில் நின்று தரிசிப்பதற்கான வசதிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

வழிபாடுகளுக்கு வருகை தரும் பெருமளவான பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைச் சீராக அமைப்பது தொடர்பிலும்  விசேட கவனம் செலுத்தப்பட்டது.

விகாராதிபதி வழங்கிய ஆலோசனைகளுக்கு இணங்க, அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் இதன்போது  உறுதியளித்தார். இந்த விஜயத்தின் போது அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.