எம்.கே.சிவாஜிலிங்கம் இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் சுயேட்சையாகப் போட்டியிட்டார். குமார் பொன்னம்பலம் 1982 ஜனாதிபதித் தேர்தலில் தமது தமிழ் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். இவர்கள் இருவரும் பொதுவேட்பாளராகப் போட்டியிட்டு என்ன நடைபெற்றது என இன்று ஒருவர் கேட்கிறார் என்றால், அவரது அரசியல் அறிவை என்னென்பது?
யாழ்ப்பாணம் அரசாங்க செயலகத்தில் 1960-70 காலப்பகுதியில் மேலதிக அரசாங்க அதிபராகவும் பொதுசன தொடர்பு அதிகாரியாகவும் கடமையாற்றியவர் திரு. ரி. முருகேசம்பிள்ளை. அப்போது கச்சேரி என அழைக்கப்பட்ட அரசாங்க செயலகத்தில் பணியாற்றுவதற்கு முன்னர் பளைப்பகுதியில் காரியாதிகாரியாக (டி.ஆர்.ஓ) பணியாற்றிய அரச நிர்வாக அனுபவஸ்தர் இவர்.
இந்தப் பத்தியாளர் அக்காலப் பகுதியில் ஊடகர் என்ற ரீதியில் திரு. முருகேசம்பிள்ளை அவர்களுடன் நெருக்கமாகப் பழகியவர். 1974 அக்டோபரில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் பரமேஸ்வராக் கல்லூரியை பல்கலைக்கழக வளாகமாக திறந்து வைக்க அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா விஜயம் செய்தார்.
இதனை எதிர்த்து தமிழர் ஐக்கிய முன்னணியினர் அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம் தலைமையில் நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலய முன்றலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். தமிழர்கள் முதலில் எதனையும் எதிர்ப்பார்கள், பின்னர் தந்தது போதாது என்று மேலும் கேட்டுப் போராடுவார்கள் என்று அப்போது திரு. முருகேசம்பிள்ளை அவர்கள் சொன்னது இன்றும் நன்றாக ஞாபகத்தில் உள்ளது.
இவரது கூற்று உண்மையானது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தை முழுமையான பல்கலைக்கழகமாக மாற்ற முதலில் கேட்கப்பட்டது. மருத்துவபீடம், விவசாயபீடம், சட்டபீடம் என்பவை பின்னர் கேட்டுப் பெறப்பட்டவை. இது வரலாறு.
அவ்வேளையில் திரு. முருகேசம்பிள்ளை அவர்கள் வேறு இரண்டு விடயங்களையும் முக்கியமாகக் குறிப்பிட்டிருந்தார். யாழ்ப்பாண நகரில் மத்திய கல்லூரிச் சந்தியில் மணிக்கூட்டுக் கோபுரம் அமைக்கப்பட்டபோது அதனை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டதாம். அவ்வழியாக நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் மணிக்கூட்டை அண்ணாந்து பார்த்து செல்லும்போது விபத்துகள் இடம்பெறுமென்று இந்த எதிர்ப்புக்கு காரணம் கூறப்பட்டதாம். ஆனால் சில வருடங்களின் பின்னர் மேலும் பல சந்திகளில் மணிக்கூட்டுக் கோபுரம் அமைக்குமாறு அரசாங்கத்திடம் இவர்களே மனு கொடுத்தார்களாம்.
அவர் கூறிய இன்னொரு சம்பவம் யாழ்ப்பாணத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது தொடர்பானது. வயல்களை ஊடறுத்து ரயில் பாதை போடப்பட்டபோது அதற்கு எதிரான போராட்டம் பல மாதங்கள் நடைபெற்றது. ரயில் சத்தத்தினால் மாடுகள் நிலத்தை உழுவது தடைப்படுமெனவும், அதனால் விவசாய உற்பத்தி பாதிக்கப்படுமெனவும் அவர்கள் காரணம் கூறினராம். காலக்கிரமத்தில் யாழ்ப்பாணத்துக்கு ஒரு ரயில் சேவை போதாது என்று கூறி மேலதிக ரயில் சேவைகள் (யாழ்தேவி, உதயதேவி, மெயில் ரயில், எக்ஸ்பிரஸ் ரயில்) கேட்டு அதிகரிக்கப்பட்டதாக திரு. முருகேசம்பிள்ளை அவர்கள் குறிப்பிட்டார்.
இந்த விடயங்களை இப்போது மீள் நினைவுக்கு உட்படுத்தி குறிப்பிடுவதற்கு ஒரு தேவை உண்டு. வரப்போகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டுமென்ற கருத்தறி முயற்சியை கருவிலேயே சிதைப்பதற்கு வெளிவரும் எதிர்ப்புகளே.
பொதுவேட்பாளர் ஒருவரை தேர்தல் களத்தில் இறக்க வேண்டுமென்பது ஒரு கோரிக்கையாக மட்டுமே இப்போது உள்ளது. இதன் சாதக பாதகங்களை ஆய்ந்தோய்ந்து முடிவெடுப்பதற்காக இதனை முன்னெடுக்கும் சிவில் சமூகத்தினர் வடக்கிலும் கிழக்கிலும், தெற்கிலும்கூட பல்வேறு தரப்பினரை சந்தித்து விளக்கி வருவதுடன் மனுக்களையும் கையளித்து வருகின்றனர். இந்தக் கருத்தறி முயற்சியை எதிர்க்க வேண்டுமென்பதற்காகவே எதிர்ப்பவர்கள் சிலவேளை பின்னால் வரும் தேர்தல்களில் பொதுவேட்பாளர்களை தேடிப்பிடித்து நிறுத்த முன்வரக்கூடும். இதற்காகவே மணிக்கூடு கோபுரம் மற்றும் ரயில் சேவை ஆரம்ப நிகழ்வுகளை இங்கு குறிப்பிட நேர்ந்தது.
அநேகமாக யூலை மாதமளவிலேயே ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளிவருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் அக்கதிரையில் ஏறவிடக்கூடாது என்ற இலக்கில் சஜித்தும் அனுரவும் தங்கள் பரப்புரைகளை ஆரம்பித்து விட்டனர். முக்கியமாக வடக்குத் தமிழரின் வாக்குகளை இலக்கு வைத்து அம்புகளை வீசுகிறார்கள்.
நிலைமையை அவதானித்து பொதுவேட்பாளரை நிறுத்தலாமென்ற நிலைப்பாட்டில் சிவில் சமூகத்தினர் உள்ளனர். அதற்கிடையில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பொத்துவில் முதல் பொலிகண்டிவரை புகழ் வேலன் சுவாமிகள் போட்டியிடுவார்களா என்ற பட்டிமன்றம் ஆரம்பமாகிவிட்டது. போகிற போக்கைப் பார்த்தால் நல்லை ஆதீன முதல்வர், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய தலைவர் ஆறுதிருமுருகன் ஆகியோரின் பெயர்களையும் சிலர் சந்திக்கு இழுக்கலாம்.
பௌத்த பிக்குகள் சிங்களக் கட்சிகளை உருவாக்கி அதன் தலைவர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் வரலாமென்றால் தமிழர் தரப்பிலிருந்து ஆன்மிகவாதிகள் ஏன் வரக்கூடாதென்ற கேள்வி சிலரிடம் உள்ளது. முப்பத்தியைந்து வயதைத் தாண்டிய பல்கலைக்கழகச் சமூகத்தை சார்ந்த ஒருவரை பொதுவேட்பாளராக நிறுத்தக்கூடாதா என்ற கேள்வியும் சிலரிடம் உண்டு. இவைகளுக்கான பதில் அடுத்த ஓரிரு மாதங்களில் கிடைத்துவிடலாம்.
அதற்கு முன்னர், பொதுவேட்பாளர் தொடர்பாக இதுவரை வெளிவந்த கருத்துகள் – முக்கியமாக தமிழ் அரசியல் கட்சிகளின் தரப்பிலிருந்து வெளிவந்தவை பெரும்பாலானவர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன.
தமிழரசுக் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி கண்ட பின்னர் கட்சியின் செயலாளர் பதவியில் கண் வைத்து சரிப்பட்டு வராது போன சுமந்திரன் சொல்கிறார் – தமிழ் வேட்பாளர் போட்டியிட்டால் சிங்களவர் தரப்பில் அது இனவாதத்தைத் தூண்டுமென்று. சிங்களவரிடம் இனவாதமே இல்லையென்பதுபோல இந்தக் கூற்று அமைகிறது. இருப்பினும், சிங்களவர் இனவாதத்தை தூண்டுவார்கள் என்று கூறுவது அவர்களை இந்நிலை நோக்கி உசுப்பி விடுவாக இருக்கிறது என்பது விடயம் அறிந்தவர்களின் கருத்து.
தமிழரசுக் கட்சித் தலைவர் தேர்தலில் சுமந்திரனை தோற்கடித்து தலைவராக வெற்றி பெற்றும் அப்பதவியை அனுபவிக்க முடியாத நிலையிலுள்ள சிவஞானம் சிறீதரன், பொதுவேட்பாளர் போட்டியிடுவதை கொள்கையளவில் தாம் இணங்குவதாக அறிவித்துள்ளார்.
புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் நிலையில், இதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
தமிழரசின் வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதனின் கருத்து, பொதுவேட்பாளர் விடயத்தில் தமிழ் மக்களுக்கு ஆர்வமில்லை என்பது (இதனை எந்தப் பூதக்கண்ணாடியால் அவர் கண்டுபிடித்தார் என்பது தெரியவில்லை).
தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான இரா.சம்பந்தன் பொதுவேட்பாளர் விடயத்தை ஏற்க முடியாது என்று கூறியதாக ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன. சம்பந்தன் அரச பங்களாவில் அரச தயவில் தங்கியிருப்பதால் பொதுவேட்பாளரை எதிர்க்கிறாரென்று சுடச்சுட பதிலளித்துள்ளார் முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் எம்.பியுமான சி.வி.விக்னேஸ்வரன்.
பொதுவேட்பாளர் விடயம் தமிழர் தரப்பில் பிரதேசவாதத்தை ஏற்படுத்தும் என்பதோடு வேறு பல காரணங்களையும் கூறியுள்ளார் தமிழரசின் மூத்த துணைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம். கட்சித் தலைவர் போட்டியில் சுமந்திரனை ஆதரிக்கப்போய் தோல்வி கண்ட பின்னர் இனிமேல் எவரையும் ஆதரிக்கப்போவதில்லையென்று கூறும் இவர், ஆரம்பத்திலேயே நடுநிலைமை வகித்திருந்தால் நெருக்கடியான இவ்வேளையில் சிலவேளை கட்சியின் இடைக்காலத் தலைவராகியிருக்கலாம். யார் கண்டது?
எமக்கொரு பொதுவேட்பாளர் வேண்டுமென்று வலியுறுத்திக் கூறியுள்ளார் தமிழரசின் செயலாளர் பதவிக்கு முன்மொழியப் பெற்ற மட்டக்களப்பு தமிழரசின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பியுமான சிறீநேசன். (சி.வி.கே. சிவஞானம் அவர்கள் கூறிய பிரதேசவாதம் அடிபட்டுப் போயிற்று).
இறுதியாக, தமிழர் தமிழருக்கு வாக்களிப்பது இனவாதமா என்று (சுமந்திரனைப் பார்த்து) கேள்வி எழுப்பியுள்ளார் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.
தமிழ் பொதுவேட்பாளர் போட்டியிடுகிறாரோ இல்லையோ இவ்விவகாரம் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதைபோன்று அல்லது குரங்குவால் போன்று இழுபடப் போவது நிச்சயம்.
இவ்விடயத்தில் சுமந்திரன் தெரிவித்திருந்த ஒரு கருத்து அவரது அரசியல் அறிவை உள்நோக்கிப் பார்க்க வைக்கிறது. 1982ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் குமார் பொன்னம்பலம் போட்டியிட்டார். 2010, 2019 ஜனாதிபதித் தேர்தல்களில் எம்.கே.சிவாஜிலிங்கம் போட்டியிட்டார். இவர்கள் இருவரும் பொதுவேட்பாளராகப் போட்டியிட்டு என்ன நடந்தது என்றவாறு சுமந்திரனின் கேள்வி அமைந்திருந்தது.
குமார் பொன்னம்பலம் தமது தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். எம்.கே.சிவாஜிலிங்கம் தாம் சார்ந்த ரெலோவில் போட்டியிடாது சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். இலங்கையின் அதிகார தேர்தல் வெளியீட்டைப் பார்க்கின் இது தெரியவரும்.
தமிழரசுக் கட்சி முழுமையாக குமார் பொன்னம்பலத்தை எதிர்த்தபோதிலும் 1982 ஜனாதிபதித் தேர்தலில் இவர் வடக்குக் கிழக்கில் 1,64,000க்கும் அதிகமான வாக்குகளை தமிழ் காங்கிரஸ் சார்பில் பெற்றிருந்தார் என்பதை அப்போது பதினெட்டு வயது மாணவனாக இருந்த சுமந்திரன் அறியாதிருந்திருக்கிறார் போலும். சிவாஜிலிங்கம் இரண்டு தேர்தல்களிலும் முழு இலங்கையில் முறையே 9,000, 12,000க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார்.
இந்தப் பின்னணியில் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து ஒருவர் போட்டியிடுவதை ஒரு ஷவீடு|க்குள் இருப்பவர்கள் வெவ்வேறு கோணத்தில் பார்த்து கருத்துக் கூறுவது ஏனென்று புரியவில்லை. அண்மையில் இடம்பெற்ற கட்சியின் தேர்தலில் உள்ஷவீடு|க்குள்ளேயே போட்டியிட்டு, அதற்கு ஜனநாயகம் என்று மை பூசி பிளவுபட்டு நிற்பவர்கள், அது போதாதென்று ஜனாதிபதித் தேர்தலிலும் தங்கள் வாய்வரிசையை காட்ட முனைவது தெரிகிறது.
தேர்தலின் பெறுபேறு தோல்வி என்பதைத் தெரிந்து கொண்டே அதில் போட்டியிடுவது தமிழரின் அடிப்படை உரிமையை சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டவே. இதையாவது அவர்கள் புரிந்து கொள்வது காலத்தின் கட்டாயம்.
பனங்காட்டான்




