திரைசேரியில் இடம்பெற்றுள்ள 2.5 மில்லியன் டொலர் விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கோரிய பாராளுமன்ற விவாதத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஜனநாயக விழுமியங்களை மீறி அரசாங்கம் சர்வாதிகாரப் போக்குடன் செயற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
கடுவலை நகரில் நேற்று செவ்வாய்கிழமை (28) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
பாராளுமன்ற அமர்வுகள் கூடியவுடன், இலங்கை இழந்த 25 இலட்சம் டொலர் தொடர்பாக விவாதத்தை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பத்தைப் பெற்றுத் தருமாறு ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் சார்பில் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் நாம் கோரிக்கை விடுத்தோம். எனினும், தற்போதைய அரசாங்கம் குறித்த விவாதத்திற்கு நேரம் ஒதுக்காது எமது கோரிக்கையை நிராகரித்து விட்டது.
நிதியை அங்கீகரித்தல், மேற்பார்வை செய்தல் மற்றும் நிதி சம்பந்தமான ஒட்டுமொத்த நடவடிக்கைகளைக் கண்காணித்தல் என்பன பாராளுமன்றத்திற்கு உரித்துடைய அதிகாரங்களாகும். ஜனநாயகத்தை வலுப்படுத்தும் இந்த அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டியது அவசியமாகும். நாட்டின் கடன் தவணையைச் செலுத்தும் சந்தர்ப்பமொன்றில், 25 இலட்சம் டொலர்களை இழந்திருப்பது மக்களுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பாகும்.
நிதி அமைச்சு மற்றும் நிதித்துறைக்குப் பொறுப்பான அரச மற்றும் அரசியல் தரப்பினரின் வினைத்திறனற்ற தன்மையால்தான் இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிப்பது மிக முக்கியமானது என்பதை நாம் வலியுறுத்துகிறோம்.
நிதிக்கு அங்கீகாரம் வழங்கும் பாராளுமன்றத்திற்கு, அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட நிதியின் ஒரு பகுதி காணாமல் போனது குறித்து விவாதிப்பது தவறான செயலா? இதற்கு ஏன் தடை விதிக்கப்படுகிறது? ஜனநாயக நாட்டில் சட்டவாக்கத்துறைக்கு இந்த கடமைகளை நிறைவேற்ற இடமளிக்காமல், சர்வாதிகாரத்தையும் தனிக் கட்சி ஆட்சியையும் முன்னிறுத்தி, தங்களது ஆதிக்கத்தைப் பரவலாக்குவதன் மூலம் ஜனநாயகம் சீரழிக்கப்படுகின்றது.
இழந்த இந்த நிதி மோசடி குறித்த விவாதத்திற்கு அரசாங்கம் சந்தர்ப்பம் தராமை வருந்தத்தக்கது. நாட்டிற்காக நிறைவேற்றப்பட வேண்டிய கடமை இது. வெஸ்ட்மின்ஸ்டர் சம்பிரதாயத்தைப் பின்பற்றும் நாடாக நாம் இது குறித்து விவாதிக்க வேண்டும். ஆனால் ஜே.வி.பி தலைமையிலான இந்த அரசு, அந்தச் சம்பிரதாயங்களை நடைமுறைப்படுத்த தயாராக இல்லாமை கவலையளிக்கிறது.
இது மாத்திரமன்றி, மேலும் பல வெளிநாட்டு ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் கிடைத்து வருகின்றன. இவை குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும். இந்த 25 இலட்சம் டொலர் காணாமல் போன விடயத்தை இந்த அரசாங்கம் பல மாதங்களாக வெளிப்படுத்தாமல் மறைத்து வைத்திருந்தது.
ஜனாதிபதி தலைமையிலான அரசு, ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்காமல், இந்த இழப்பு குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க உடனடியாகச் சந்தர்ப்பம் வழங்க வேண்டும். ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுத்து சர்வாதிகார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டாம் என அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.



