அஞ்சல் திணைக்களத்தின் 626,755 அமெரிக்க டொலர் மூன்றாம் தரப்பு கணக்குக்கு மாறிய சம்பவம்

அஞ்சல் திணைக்களத்துக்குச் சொந்தமான 626,755 அமெரிக்க டொலர் மூன்றாம் தரப்பினரின் கணக்கிற்குப் பரிமாற்றப்பட்ட சம்பவம் குறித்து வெளிவிவகார அமைச்சு ஊடாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு இன்று (23) அறிவித்துள்ளது.

இவ்வழக்கு கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இவ்விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இதன்போது நீதிமன்றத்தில் மேலதிக அறிக்கையொன்றைச் சமர்ப்பித்த  குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து விளக்கமளிக்கையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மின்னஞ்சல் தரவுகள் அடங்கிய சேவர் அமைப்பு மற்றும் விசாரணைகளின் போது கைப்பற்றப்பட்ட மடிக்கணினிகள் உட்பட  இலத்திரனிய சாதனங்கள் மேலதிக பகுப்பாய்வுகளுக்காக இலங்கை கணினி அவசர  பதிலளிப்பு  குழுவுக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையிலேயே விரிவான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் இதன்போது தெரிவித்திருந்தனர்.

மேலும் தொடர்ந்து விடயங்களை முன்வைத்த விசாரணை அதிகாரிகள், அஞ்சல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரி ஊடாக இரண்டு சந்தர்ப்பங்களில் ஒன்பது வெவ்வேறு கணக்குகளுக்கு இந்த பெருந்தொகை பணம் பரிமாற்றப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக நீதிமன்றில் சுட்டிக்காட்டினர்.  அத்தோடு அமெரிக்க அஞ்சல் சேவைக்கு  செலுத்தப்பட வேண்டிய குறித்த பணத்தொகையானது, மோசடியான முறையில்  முன்றாம் தரப்பினரின் கைகளுக்குச் சென்றடைந்தமை தொடர்பில்  இந்த விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகளாவிய ரீதியில் அஞ்சல் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்வதற்காக உலகளாவிய அஞ்சல் ஒன்றியத்தினால் பிரத்யேக மின்னஞ்சல் கணக்குகள் வழங்கப்படுகின்றன. எனினும், அந்த உத்தியோகபூர்வ நடைமுறைக்கு புறம்பாக, வேறொரு மின்னஞ்சல் கணக்கைப் பயன்படுத்தி இந்தப் பணச்செலுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையிலேயே விசாரணை நடவடிக்கைகள் முடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இந்நிலையில் மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்கழளைப் பரிசீலித்த நீதிவான், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து, அதன் முன்னேற்ற அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டார்.