அதிகாரத்தை மட்டுப்படுத்தும் அரசியலமைப்பு மூலம் மட்டுமே ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும்!

நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களினாலேயே இலங்கையின் ஜனநாயகத்திற்கும் அரச நிறுவனங்களுக்கும் வரலாற்றில் பெரும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வியாழக்கிழமை (16) நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் ஒன்றின் மூலம் மக்கள் ஒரு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தாலும், அந்த அரசாங்கத்தின் அதிகாரங்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி தன்னிச்சையாகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டால், அது ஜனநாயகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறிவிடும்.

சில சந்தர்ப்பங்களில், மக்கள் தமது சொந்த வாக்குகளினாலேயே தேர்ந்தெடுக்கும் தலைவர்களிடமிருந்து ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்படுகிறது.

பொதுவாக மக்கள் புதிய தலைவர்களை நல்லவர்கள் என்றும், அவர்களின் நோக்கம் தூய்மையானது என்றும் நம்பி, அவர்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்காமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தால் அவர்கள் அதிகாரத்தைச் சரியாகப் பயன்படுத்துவார்கள் என்று எண்ணுகின்றனர்.

ஆனால், உலகளவில் ஜனநாயகம் சீர்குலைந்து போன நாடுகள் அனைத்திலும் மக்கள் ஆரம்பத்தில் இவ்வாறுதான் சிந்தித்துத் தவறிழைத்தனர்.

இலங்கையின் கடந்த கால வரலாற்றை நோக்கினாலும் கூட, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் பதவியேற்கும் அரசாங்கங்கள் தவறுகளை இழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது புலனாகிறது.

தமக்குக் கிடைத்த அதிகப்படியான மக்கள் ஆதரவு மற்றும் அதிகாரத்தின் காரணமாக இத்தகைய அரசாங்கங்கள் தவறுகளை நோக்கித் தள்ளப்படுகின்றன.

மக்கள் தமக்கு வழங்கிய தேர்தல் ஆணை என்பது, தங்களுக்குத் தேவையான எதனையும் செய்வதற்காக வழங்கப்பட்ட ஒரு வெற்றிடக் காசோலை அல்ல என்பதை இந்த அரசாங்கங்கள் மறந்துவிடுகின்றன.

இதன் காரணமாகவே அரசியலமைப்பு என்பது ஒரு நாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. மக்கள் வாக்குகளால் எவ்வளவு பலத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், எந்தவொரு அரசாங்கத்தின் அதிகாரமும் அரசியலமைப்பு மற்றும் சட்ட திட்டங்களின் வரம்புகளுக்குள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

தலைவர்கள் தங்களின் தன்னிச்சையான விருப்பங்களின்படி அதிகாரத்தைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காகவே அரசியலமைப்பிலுள்ள சட்டங்களும் விதிகளும் உதவுகின்றன.Travel

நாம் விரும்பும், நேசிக்கும் தலைவர்கள் கூடத் தவறுகளை இழைப்பதிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு இது அவசியமாகிறது என்றார்.