சத்திரசிகிச்சையின் பின்னர் நாடு திரும்பியுள்ள ரணில் விக்கிரமசிங்க, தற்போது மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார். ஓய்வில் இருக்கும் போதிலும், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக அவர் தனது நெருக்கமான அரசியல் சகாக்களை அழைத்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடல் கடந்த திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
இதன்படி, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோரை அழைத்து அவர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பதவியில் இருந்து விலகியமைக்கான உண்மைப் பின்னணியை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ரணில் இதன்போது வலியுறுத்தினார். பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் ஆலோசனையின் பேரில் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிடுமாறும் அவர் பணிப்புரை விடுத்தார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு எத்தனை பேர் ஆலோசனை வழங்குகிறார்கள் என ரணில் இதன்போது கேள்வி எழுப்பினார். ஒரு பக்கம் அரசாங்கம் எரான் விக்கிரமரத்னவை கொண்டுவர முயற்சிக்கிறார்கள், மறுபுறம் ஹர்ஷ டி சில்வாவிடம் ஆலோசனை பெறுவதாகக் கூறப்படுகிறது.
எரான் விக்கிரமரத்னவை இவ்வாறான பதவிகளுக்குக் கொண்டுவருவது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியினரிடையே பெரும் எதிர்ப்பு நிலவுகிறது. இந்த கொடுக்கல் வாங்கல்களுக்குப் பின்னால் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் நாட்டு மக்களுக்கு உண்மை நிலைமையை தெரியப்படுத்த வேண்டும். அரசாங்கத்திற்கு எதிரான மோசடி குற்றச்சாட்டுக்களை மூடிமறைக்க அரசாங்கம் இன்னோரன்ன செயல்களை செய்து வருகிறது. வாக்களித்த மக்களை முட்டாள்களாக்கவே அரசாங்கம் முற்படுகிறது. கூட்டு எதிர்க்கட்சி இதற்கு எதிராக வலுவாக செயல்பட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.




