மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துமாறு ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி தொடர்ந்து பிரசாரம் செய்துவருவதாக கஜேந்திரகுமார் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் கடும் விசனம் வெளியிட்டுள்ள அக்கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன், ‘நிச்சயமாகக் கொண்டுவரப்படும் எனும் உத்தரவாதம் இல்லாத புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படவேண்டிய தமிழர்களுக்கான அரசியல் தீர்வு பற்றிப் பேசுகிறோம். அவ்வாறிருக்கையில் ஏற்கனவே அரசியலமைப்பில் இருப்பதை நடைமுறைப்படுத்துமாறு கோருவதில் என்ன பிழை இருக்கிறது?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் கடந்த மார்ச் 2 ஆம் திகதி மற்றும் இம்மாதம் 9 ஆம் திகதிகளில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு சந்திப்புக்களில் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள்கலந்துகொண்டிருந்ததுடன், அவர்களில் இடையில் பொது இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டன.
இருப்பினும் தமிழ்த்தேசியப் பேரவையினால் கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி நடாத்தப்பட்ட கூட்டத்தின் பிரகாரம் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினைக் கூட்டாக முன்வைப்பதற்கான தீர்வுத்திட்ட வரைவைத் தயாரிப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட 28 பேரடங்கிய ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழுவை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி தி.விக்னேஸ்வரனால் கடந்த 17 ஆம் திகதி அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.
அதுமாத்திரமன்றி தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சந்திப்புக்களின்போது சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்துப் பேசுவதென இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னரும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட தரப்பினர் மாகாணசபைத்தேர்தல் விரைவாக நடாத்தப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வடக்கில் தொடர்ந்து பிரசாரங்களை முன்னெடுத்துவருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இக்குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளித்த சுரேஷ் பிரேமசந்திரன், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பல்வேறு ஆவணங்கள் இருப்பதாகவும், எனவே புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின்போது அதில் உள்வாங்கப்படவேண்டிய தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்னவென்பது பற்றிய ஆவணத்தைத் தயாரிப்பது அத்தனை கடினமான காரியமல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.
'தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலாவது கூட்டத்தின்போது அதனைச் செய்துமுடிப்பதற்குத் தயாராக இருப்பதாகவே கஜேந்திரகுமார் இணங்கினார். அதன்பின்னர் அண்மையில் நடைபெற்ற இரண்டாவது கூட்டத்திலும் அவரது கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
அவ்வாறிருக்கையில் தற்போது அரசியல் தீர்வு குறித்து அவர்கள் பிறிதொரு குழுவாகத் தனித்துச் செயற்படுவதாக இருந்தால், தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் கூட்டு முயற்சியில் தொடர்ந்து இணைந்திருப்பதா, இல்லையா என்று அவர்கள் தான் தீர்மானிக்கவேண்டும்’ எனவும் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
அதேபோன்று, 13 ஆவது திருத்தம் என்பது ஏற்கனவே அரசியலமைப்பில் இருக்கின்ற விடயமாகும். நாம் புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்படக்கூடும் என்ற எண்ணக்கருவின் அடிப்படையிலேயே தீர்வுத்திட்டத்தைத் தயாரிக்கின்றோம்.
ஆனால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்பதற்கான உத்தரவாதம் எதுவுமில்லை. எனவே இதுவரை பேசப்படாத ஒரு புதிய அரசியலமைப்பில் நாம் தமிழர்களுக்கான தீர்வை முன்மொழிவது குறித்து ஆராய்கிறோம். இன்னமும் கொண்டுவரப்படாத ஒன்றைப் பற்றிப் பேசும்போது, ஏற்கனவே அரசியலமைப்பில் இருப்பதை நடைமுறைப்படுத்துமாறு கோருவதில் என்ன பிழை இருக்கிறது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பின்போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கலந்துகொண்ட ந.காண்டீபன் இவ்விடயம் தொடர்பில் கரிசனை வெளியிட்டதாகவும், இருப்பினும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையில் அங்கம் வகிக்கும்சட்டத்தரணிகள் உள்ளடங்கலாக சகலரும் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டிருக்கும் 13 ஆவது திருத்தம் குறித்துப் பேசக்கூடாது என்று சொல்லமுடியாது எனக் கூறியதாகவும் சுரேஷ் பிரேமசந்திரன் விளக்கமளித்தார்.





