இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் நிர்வாக சீர் கேடுகளை கண்டித்து தன்னார்வ தொண்டர்கள் போராட்டம் முன்னெடுப்பு!

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் நிர்வாக சீர்கேடு குறித்து சுட்டிக்காட்டி, மன்னார் கிளையுடன் இணைந்து பணியாற்றும் தன்னார்வ பணியாளர்கள் இன்றைய தினம் புதன்கிழமை (15) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை நிகழ்வுகள்

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மன்னார் மாவட்டத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் இணைந்து தன்னார்வ பணியாளர்களாக 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேவையாற்றி வந்துள்ளனர்.

இதுவரை காலமும்  செஞ்சிலுவைச் சங்க   மன்னார்  கிளையின் அங்கத்தவர்களாக தம்மை  இணைத்துக்கொள்ளும்படி கோரிக்கை விடுத்துவந்த போதிலும் எந்தவொரு நிர்வாகமும் தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்து இப்போராட்டத்தை இன்றைய தினம் காலை நடத்தினர்.

காலை 10 மணியளவில் மன்னார் பொது நூலகத்திற்கு முன் ஒன்றுகூடிய இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளை தன்னார்வ பணியாளர்கள் வாயை சிவப்புத் துணியால் கட்டியவாறு பதாதைகளை ஏந்தியவாறு மன்னார் மாவட்டச் செயலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.

அதனை தொடர்ந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனை சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

குறிப்பாக இந்த நிர்வாகங்கள் திட்டமிட்டு தம்மை  புறக்கணித்து ஜனநாயக விரோதமாக இடைக்கால நிர்வாகத்தை முறைகேடான விதத்தில் அமைத்து பல்வேறுபட்ட நிர்வாக மோசடிகளை முன்னெடுப்பதாக  அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பொதுச் சபைக் கூட்டங்கள் எதுவும் இடம்பெறாமல், தனிப்பட்ட சிலரின் விருப்பத்திற்கு அமைய நிர்வாகம் நடத்தப்படுகிறது.

இதுவரை காலமும் எந்தவித ஊதியமோ சலுகைகளோ இன்றி, மன்னார் மக்களின் மனித நேயத்தைப் பேணும் சமூகப் பணியை செய்து வரும் தன்னார்வ பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்தனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்வரும் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்:

தகுதியின் அடிப்படையில், நியாயமான முறையில் எமக்கான “அங்கத்துவத்தை” உடனடியாக உறுதி செய்தல் வேண்டும்.

முறையற்ற விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள “இடைக்கால சபை” கலைக்கப்பட்டு, மாவட்டச் செயலாளர் தலைமையில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஜனநாயக அடிப்படையில், சுயாதீனமான “பொதுச்சபைக் கூட்டம்” நடத்தப்பட வேண்டும்.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையினால் முன்னெடுக்கப்படும் அனைத்துச் செயற்றிட்டங்கள் தொடர்பான விபரங்கள் “வெளிப்படைத்தன்மையுடன்” காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுவான செஞ்சிலுவைச் சங்கத்தின் “யாப்பில்” குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் மன்னார் கிளைக்கும் பொருந்தும் என்பதை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் மீள்பரிசீலனை செய்து, இதற்கென தனியான “விசாரணைக் குழு” ஒன்றை நிறுவ வேண்டும்.

இடைக்கால சபையை கலைத்து நியாயமான முறையில் வெளிப்படைத்தன்மையுடன் நிர்வாகத்தைத் தெரிவு செய்தல் வேண்டும்

இவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தயாரிக்கப்பட்ட மகஜரை அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.

சமீபத்திய செய்திகள்