இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 57.4 மில்லியன் டொலர் நிதியுதவி

வீடுகளின் கூரை மீது பொருத்தப்படும் சூரிய மின்னுற்பத்தி தொகுதி (Rooftop Solar Aggregation) மற்றும் மெய்நிகர் தேறிய அளவீடு (Virtual Net Metering) மூலம் குறைந்த விலையில் தூய்மையான எரிசக்தியைப் பெறுவதற்கான சாத்தியப்பாட்டை விரிவுபடுத்தவும், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக்  குறைக்கவும் உதவும் வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கி 57.4 மில்லியன் டொலர் நிதியுதவியை இலங்கைக்கு வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிதியுதவியானது 35 மில்லியன் டொலர் சலுகைக் கடன், ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து பெறப்பட்ட 16.9 மில்லியன் டொலர் மானியம், கூட்டுக் கடன் வழங்கல் பொறிமுறைக்காக ஜப்பான் நிதியத்தினால் வழங்கப்பட்ட 5.5 மில்லியன் டொலர் மானியம் மற்றும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் கட்டமைப்புக்களின் கூட்டு நிதியளிப்பு என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.

அதற்கமைய இத்திட்டத்துக்காக மதிப்பிடப்பட்ட மொத்த செலவு 80.5 மில்லியன் டொலராக உயர்வடைந்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் அரசுக்கு சொந்தமான இரண்டு மின்சார நிறுவனங்களான எலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லங்கா (பிரைவேட்) லிமிடெட் மற்றும் லங்கா எலக்ட்ரிசிட்டி கம்பெனி (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றுக்கு பெரிய அளவிலான சூரிய மின்னுற்பத்திக்  கட்டமைப்புகளிலிருந்து மின்சாரத்தை ஒன்றிணைத்து தகுதியுடைய நுகர்வோருக்கு மெய்நிகர் முறையில் விநியோகிக்கும் ஒரு மாதிரியை உருவாக்க முடியும்.

“இந்தத் திட்டம் இலங்கைக்குக் குறைந்த விலையிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கிடைப்பனவை மேம்படுத்த உதவுவதுடன், நெகிழ்வானதும் சகலரையும்  உள்ளடக்கியதுமான மின்சார துறையை வலுப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும்” என ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் நாயகம்  ஷானன் கவுலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இது சிறு வணிகங்களுக்கு ஆதரவளிப்பதுடன்,  விநியோகக் கட்டமைப்பை நவீனமயமாக்கல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை மேம்படுத்தல் என்பவற்றுக்கும் பங்களிப்புச் செய்யும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.