இலங்கையில் விவசாய இயந்திர மையம் அமைப்பது தொடர்பில் சீன பிரதிநிதிகள் கலந்துரையாடல்

இலங்கையில் விவசாய இயந்திர மையம் ஒன்றை நிறுவுவது தொடர்பில் சீன பிரதிநிதிகள் குழுவொன்று விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்தவுடன் கலந்துரையாடியுள்ளது.

இந்த சந்திப்பு திங்கட்கிழமை (20) கொழும்பில் நடைபெற்றதுடன், முன்மொழியப்பட்ட திட்டத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான விபரங்களை இலங்கை அதிகாரிகளிடமிருந்து சீன பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர்.

இதன்போது, நிலத்தை பண்படுத்துதல், நெல் மற்றும் ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கான நவீன விவசாய இயந்திரங்களை அறிமுகப்படுத்துதல், அறுவடைக்குப் பின்னரான இழப்புகளை குறைத்தல் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட விவசாய உற்பத்திகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இந்தத் திட்டத்திற்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் வகையில், இலங்கையின் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து மண் மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்ள உதவுவதற்கு சீன பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

விவசாயத் திணைக்கள அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், விவசாயிகளுக்கு இயந்திர வசதிகளை பரந்தளவில் பெற்றுக்கொடுப்பதற்காக கூட்டுறவு சங்கங்கள், சமூக அமைப்புகள் மற்றும் தனியார் துறை ஊடாக இயந்திரங்களை விநியோகிப்பது முக்கியமானது என சுட்டிக்காட்டினர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் கே.டி. லால்காந்த, நவீன விவசாய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது விவசாய உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும், விவசாயிகளின் உற்பத்திச் செலவுகளை குறைப்பதற்கும் அத்தியாவசியமானது என தெரிவித்தார்.

மேலும், முன்மொழியப்பட்ட விவசாய இயந்திர வசதிகளை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சு முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையின் விவசாயத் துறையை நவீனமயப்படுத்தும் நோக்கில், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.