ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கைப் பாராளுமன்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம்  என்பவற்றுக்கிடையில் காணப்படும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் கைச்சாத்திடப்பட்டது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கைப் பாராளுமன்றத்தின் சார்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும்,  ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் சார்பில் இலங்கைக்கான பதில் வதிவிடப் பிரதிநிதி ஃபன்ஷோ வென்ங்யல் ஆகியோரும்  கைச்சாத்திட்டனர்.

இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கலாநிதி அலெக்ஸான்டர் சஷா பொடிரோஸா  தலைமையிலான பிரதிநிதிகள் குழுவும் கலந்துகொண்டது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் சட்டவாக்க செயன்முறை மேலும் வலுப்படுத்தப்படவிருப்பதுடன், பாராளுமன்றத்தின் நிறுவனத் திறனை மேம்படுத்துதல் மற்றும் மக்கள் தொகை மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பான கொள்கை வகுப்பில் இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பு புதிய மட்டத்திற்கு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், சனத்தொகை தாங்குதிறன், பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள், பாலின சமத்துவம், பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் தீங்கிழைக்கும் சமூக நடைமுறைகள் தொடர்பில் ஆதாரபூர்வமான சட்டவாக்கத் தீர்மானங்களை எடுக்க தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல், அண்மைய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள் மற்றும் சனத்தொகை ஆய்வுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு தகவல்களை பாராளுமன்றத்திற்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு தரப்பினரும் இணைந்து செயல்படவுள்ளனர்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர்கள்,அரசாங்க அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களின் பங்கேற்புடன் திறன் பரிமாற்ற நிகழ்ச்சிகள் மற்றும்

உயர்மட்ட கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்தல், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதாரபூர்வமான கொள்கை ஆலோசனைகள் மற்றும் சுருக்க அறிக்கைகளை வழங்குதல்,

பயிற்சி நிகழ்ச்சிகள், செயலமர்வுகள் மற்றும் அனுபவப் பகிர்வு அமர்வுகளை நடத்துதல் ஆகியவற்றுக்கும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கிறது.

சனத்தொகை இயக்கவியல், பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள், பாலின சமத்துவம் தொடர்பான சர்வதேச கொள்கைக் கட்டமைப்புக்கள், அரசாங்கங்களுக்கு இடையிலான செயல்முறைகள் மற்றும் இலங்கை ஏற்றுக்கொண்டுள்ள சர்வதேசப் பொறுப்புகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேவையான ஆதரவை வழங்குவதற்கும் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகள்