கபில சந்திரசேன மரணம் : உடற்கூற்று பரிசோதனை இன்று !

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி  கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனை இன்றைய தினம் சனிக்கிழமை (9) செய்யப்படவுள்ளது.

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுவரும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்வைத்த அறிக்கைகளை கருத்தில் கொண்டு, கோட்டை நீதவான் பசன் அமரசேன, உடற்கூற்று பரிசோதனை செய்வதற்கான உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

இதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளரினால் நியமிக்கப்படும் 5 பேர் கொண்ட சட்ட வைத்திய அதிகாரிகள் குழுவால் இந்த உடற்கூற்று பரிசோதனை செய்யப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, உடற்கூற்றுப் பரிசோதனை தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பின்னணி

 ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று வெள்ளிக்கிழமை  (8) காலை சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில், சடலத்தின் கழுத்துப் பகுதியில் அறுந்த நிலையில் துணிப் பட்டியொன்று காணப்பட்டதாகவும், இது தற்கொலையாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த மரணம் குறித்து விரிவான உடற்கூற்று பரிசோதனையை முன்னெடுப்பதற்காக ஐந்து பேர் கொண்ட சட்ட வைத்தியர்கள் குழுவை நியமிக்குமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன, கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.

பிரபல கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவுக்குச் சொந்தமான கொள்ளுப்பிட்டி, பேட்ரிஸ் மாவத்தையில் அமைந்துள்ள வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள அறையிலேயே சடலம் மீட்கப்பட்டது.

சடலம் மீட்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களின்படி, சந்திரசேனவின் தலை குஷன் நாற்காலியின் மீதும், உடலின் கீழ் பகுதி தரையைத் தொட்ட நிலையிலும் காணப்பட்டுள்ளது.

கதவு மற்றும் கழுத்துப் பகுதியில் துணிப் பட்டிகள் தொங்கிய நிலையில் அவதானிக்கப்பட்டுள்ளன.

அரவிந்த டி சில்வாவின் மனைவியின் சகோதரியின் கணவரான கபில சந்திரசேன, நேற்று மாலை அந்த வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். இன்று காலை அவர் தங்கியிருந்த அறையின் கதவைத் தட்டியும் பதிலளிக்காத நிலையில், கூடுதல் சாவியைக் கொண்டு கதவைத் திறந்து பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

கபில சந்திரசேனவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நேற்றுமுன்தினம் (07) கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையிலேயே இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.

2013ஆம் ஆண்டு ஏர்பஸ் விமான கொள்வனவு கொடுக்கல் வாங்கலில் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை கையூட்டாகப் பெற்றதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கடந்த மே 05ஆம் திகதி நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டபோது, தனது உறவினர்கள் என இருவரை போலியாகச் சித்தரித்து பிணை வழங்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு, மீண்டும் அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

விசாரணைகளின் போது, தமக்குக் கிடைத்த தரகுப் பணத்தில் 20 மில்லியன் ரூபாயை முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கும், 60 மில்லியன் ரூபாயை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் வழங்கியதாக கபில சந்திரசேன கூறியதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க எதிர்வரும் 12ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரியங்கர ஜயரத்ன ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மேலதிக விசாரணைகளை மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தலைமையிலான குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இது ஒரு தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் சதிச் செயலா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இதற்கிடையில், உடற்கூற்று பரிசோதனை அறிக்கையை எதிர்வரும் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.