காஸா நோக்கிப் பயணமான ‘குளோபல் சுமுத் புளோட்டிலா’ எனும் சர்வதேச மனிதாபிமான கப்பல் பேரணியில் பங்கேற்ற செயற்பாட்டாளர்கள் இஸ்ரேலியப் படையினரால் தடுத்துவைக்கப்பட்டு, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவது குறித்து வெளிவிவகார அமைச்சு தீவிர கரிசனை வெளியிட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி மேற்குறிப்பிட்டவாறு தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையரான சமீரா மெஹ்புப்தீனை பாதுகாப்பாக மீண்டும் இலங்கைக்கு அழைத்துவருவது குறித்து இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் இரண்டு தசாப்தகால முற்றுகைக்குள் சிக்கியிருக்கும் காஸாவில் வாழும் சுமார் 20 இலட்சம் மக்களுக்கு அவசியமான மருத்துவப்பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கும் நோக்கில் துருக்கியிலிருந்து கடந்த 14 ஆம் திகதி காஸா நோக்கிப் பயணமான ‘குளோபல் சுமுத் புளோட்டிலா’ என அழைக்கப்படும் கப்பல் பேரணியில் பங்கேற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் இஸ்ரேலியப் பாதுகாப்புப்படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு தடுத்துவைக்கப்பட்டிருப்போரில் இலங்கையரான சமீரா மெஹ்புப்தீனும் உள்ளடங்கும் நிலையில், அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், அவரை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவருவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்திவருகின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் வெளிவிவகார அமைச்சு, இஸ்ரேலிய அமைச்சர் இட்தாமர் கென்-கிவீர் வெளியிட்ட காணொளியில் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள குளோபல் சுமுத் புளோட்டிலா கப்பல் பேரணியில் பயணித்த செயற்பாட்டாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதைக்கண்டு தாம் மிகுந்த வேதனை அடைவதாகத் தெரிவித்துள்ளது.
அதேபோன்று பாதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜைக்கான உடனடி தூதரக அணுகலை உறுதிப்படுத்துவதையும், அவரது பாதுகாப்பு தொடர்பான உத்தரவாதத்தைத் பெறுவதையும், அவர் பாதுகாப்பாகவும் விரைவாகவும் மீண்டும் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்படுவது பற்றி ஆராய்வதையும் நோக்காகக்கொண்டு இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக தாம் இஸ்ரேலிய வெளிவிவார அமைச்சுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருதாகவும் வெளிவிவகார அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயலாற்றிவருவதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




