கிளிநொச்சி இளைஞன் கைது விவகாரம்! ரஜீவன் எம்.பி என்ன சொல்கிறார்?

சிறிலங்கா ஜனாதிபதி அநுர, இலங்கையில் மீண்டும் யுத்த சூழ்நிலை உருவாகாது என்றும், விடுதலைப்புலிகள் போன்ற ஆயுத இயக்கங்கள் மீள உருவாகும் வாய்ப்பு இல்லை என்றும் தெளிவாகவும் உறுதியாகவும் தெரிவித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலேயே இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, சில பாடல்கள் அல்லது கலை வெளிப்பாடுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவை ஆயுதவாதத்தை உருவாக்குகின்றன என்று வாதிடுவது யதார்த்தத்திற்குப் புறம்பான அணுகுமுறையாகும்.

லை, இலக்கியம் மற்றும் இசை என்பவை மக்களின் வரலாறு, நினைவுகள், உணர்வுகள் மற்றும் அனுபவங்களை வெளிப்படுத்தும் சமூகப் பிரதிபலிப்புகளாகும். அவற்றை குற்றம்சாட்டுவதற்குப் பதிலாக, அவை தோன்றுவதற்கான சமூக மற்றும் அரசியல் பின்னணிகளைப் புரிந்துகொள்வதே முக்கியமானதாகும்.

தமிழ் மக்கள் இன்னும் பல தீர்க்கப்படாத பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். காணி, காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் அதிகாரப் பகிர்வு, பொருளாதார முன்னேற்றம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல விடயங்களில் நியாயமான தீர்வுகள் தேவைப்படுகின்றன. இவ்வாறான அடிப்படைப் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படாதவரை, மக்களின் உணர்வுகள், நினைவுகள் மற்றும் அவற்றின் கலை வெளிப்பாடுகள் தொடர்ந்து வெளிப்படுவது இயல்பான ஒன்றாகும்.

எனவே, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிதலையும் வலுப்படுத்தும் நோக்கில், எந்தவொரு தரப்பினரும் தேவையற்ற சர்ச்சைகள் அல்லது உணர்ச்சி தூண்டல்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பணிகளில் கவனம் செலுத்துவது காலத்தின் தேவையாகும். அதுவே நிலையான சமாதானத்திற்கும் தேசிய ஒற்றுமைக்கும் வழிவகுக்கும்.

பிரதிப் பாதுகாப்பு அமைச்சருக்கு இது தொடர்பாக அறிவித்துள்ளேன். எனவே அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்கும். மக்களை யாரும் குழப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். மக்களும், அனைவரும் பொறுப்புணர்வுடன் செயல்படுவது அவசியமாகும்.