தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றுக்குள் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பல நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள பலதரப்பட்ட நிதி மோசடி வழக்குகள் தொடர்பிலும் தேடப்பட்டு வந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்லேகல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேகநபர் மற்றும் அவரது 35 வயதுடைய மனைவி ஆகியோர் இன்று (24) புதன்கிழமை அதிகாலை யாழ்ப்பாணத்தில் வைத்து வலானை மத்திய ஊழல் ஒழிப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர் இதற்கு முன்னர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியும், வாகனங்களை இறக்குமதி செய்து தருவதாகக் கூறியும், வெளிநாட்டுப் பயண வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறியும் பெருந்தொகை பணத்தை மோசடி செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அவருக்கு எதிராக நிலுவையிலுள்ள வழக்குகள் பின்வருமாறு,
கம்பஹா நீதவான் நீதிமன்றம்: 11.87 மில்லியன் ரூபா மோசடி மற்றும் மோட்டார் கார் ஒன்றை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியமைக்கான வழக்கு
அளுத்கடை நீதவான் நீதிமன்றம்: 1.72 மில்லியன் ரூபா மோசடி வழக்கு , 1.37 மில்லியன் ரூபா மோசடி வழக்கு மற்றும் வெளிநாட்டுப் பயண வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி 4.2 மில்லியன் ரூபா மோசடி செய்தமைக்கான வழக்கு
திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் : வாகன இறக்குமதி தொடர்பாக 2.2 மில்லியன் ரூபா மோசடி செய்தமைக்கான வழக்கு
தெல்தெனியவில் காரிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள இந்த சந்தேகநபர்கள், மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.





