சூரிய மின்கலங்களை செயலிழக்கச் செய்யுமாறு நுகர்வோருக்கு அறிவிப்பு!

அவசர மின்சாரத் தடைகளைத் தவிர்த்து, மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக, இன்றைய தினத்திலும் (31) காலை 8:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கலங்களை செயலிழக்கச் செய்யுமாறு சூரிய மின்கல அமைப்புகளைக் கொண்ட மின் நுகர்வோரிடம் தேசிய மின் கட்டமைப்பு இயங்குதள தனியார் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்காக, தங்களது சூரிய மின்கலங்களை தன்னிச்சையாக செயலிழக்கச் செய்யுமாறு அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமனற்ற நிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் நேற்று (30) சில மணித்தியாலங்களுக்கு மின்சார விநியோகத்தைத் துண்டிக்க வேண்டியிருந்தது. இதன் காரணமாக கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டதாக பதிவாகியிருந்தது.

வெசாக் பௌர்ணமி மற்றும் நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக, தேசிய மின் கட்டமைப்பின் மின்சாரத் தேவை கணிக்கப்பட்ட காலப்பகுதியை விட வேகமாக வீழ்ச்சியடைந்ததாலும், சூரிய மின்கலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு உயர் மட்டத்தில் காணப்பட்டதாலும், நேற்று தேசிய மின் கட்டமைப்பில் இந்த சமனற்ற நிலை உருவானது.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக, நேற்றைய தினத்திலும் பிற்பகல் 3:00 மணி வரை கூரைகளில் சூரிய மின்கலங்களைப் பொருத்தியுள்ள உரிமையாளர்களை, அவற்றை தன்னிச்சையாகத் துண்டிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், நேற்று பிற்பகல் 2:15 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர முடிந்தமை குறிப்பிடத்தக்கது.