டிஜிட்டல் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன சர்வதேச விசாரணைகளும் தீவிரம் என்கிறார் – பிரதி அமைச்சர் எரங்க

சர்வதேச நிறுவனமொன்றின் போலி மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி தொடர்பான டிஜிட்டல் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.  இதில் அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பில்லை என கருதுகின்றோம். எவ்வாறிருப்பினும் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. அதன் முடிவிலேயே இதில் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா அல்லது இது எவ்வளவு காலமாக நடந்து வருகிறது என்பது போன்ற முழுமையான விபரங்களை எம்மால் கூற முடியுமென டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்த நிதி ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டிருப்பதால், அந்தப் பணம் எங்கே சென்றது என்பதை எங்களால் டிஜிட்டல் முறையில் பின்தொடர முடிகிறது. இதைப் பற்றிப் பேசுவது வேறு, செயலில் காட்டுவது வேறு. எமது நிறுவனங்கள் அனைத்தும் முறையாக இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

உண்மையில் இந்த விசாரணைகள் சில வாரங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. தற்போது அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. என்ன நடந்திருக்கிறது என்பது பற்றி எங்களுக்கு இப்போது நல்ல புரிதல் இருக்கிறது. ஆனால் அந்தப் புரிதலை உறுதிப்படுத்திக்கொள்ள எங்களுக்குச் சற்று கால அவகாசம் தேவை.

ஏனெனில், டிஜிட்டல் உலகில் பணமானது மிக வேகமாக கைமாறக்கூடியது. திருடர்களைப் பிடிக்கச் செல்லும்போது அவர்கள் எந்தவித அச்சமும் இன்றி மோசடி செய்யக் கூடியவர்கள். டிஜிட்டல் அமைப்புகள் மீது தாக்குதல் வருவது சாதாரணமானது.

ஆனால் ஒரு நிறுவனமாக நாம் அனைவரும் இந்த டிஜிட்டல் அமைப்பைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக ஊழியர்கள் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்யும்போது, அந்தத் தரவுகள் சரியாக இருக்கிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை, டிஜிட்டல் அமைப்பு ஊடுறுவப்பட்டதை விட, அந்தச் சர்வதேச நிறுவனத்தின் பெயருக்குச் சமமான ஒரு டொமைன் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி, அந்த நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் பெயர்களிலேயே மின்னஞ்சல்களை அனுப்பி அதிகாரிகளைத் தவறாக வழிநடத்தியுள்ளனர்.

இதில் நிறுவனத்திற்குள்ளே இருப்பவர்களின் நேரடித் தொடர்பு இல்லை என்றே நாம் கருதுகிறோம். அவர்கள் அந்த மின்னஞ்சல்களில் உள்ள மாற்றத்தைக் கவனிக்காததே இதற்குக் காரணம். இருப்பினும், விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

அதன் முடிவிலேயே இதில் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா அல்லது இது எவ்வளவு காலமாக நடந்து வருகிறது என்பது போன்ற முழுமையான விபரங்களை எம்மால் கூற முடியும். சட்டத்தை நிலைநாட்ட வேண்டுமானால் முதலில் விசாரணைகளின் மூலம் என்ன நடந்தது என்பது நிரூபிக்கப்பட வேண்டும்.

அதற்கு சில நாட்கள் அல்லது ஒரு வாரம் வரை ஆகலாம். தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவு, இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு மற்றும் மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு ஆகியவை இணைந்து மிக வேகமாகச் செயல்படுகின்றன.

அந்தச் சர்வதேச நிறுவனமும் பணம் எங்கே சென்றது என்பதைக் கண்டறிய உதவி வருகிறது. பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி அமைச்சு ஆகிய அனைத்தும் இதில் தலையிட்டுள்ளன. எமது டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஊடாக அரச அதிகாரிகளுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகிறோம்.

இது அரசாங்கத்துக்கு மட்டுமல்ல, பொதுமக்களும் எதிர்நோக்கும் ஒரு பிரச்சினையாகும். டிஜிட்டல் மயமாக்கலில் மக்களின் நம்பிக்கை முக்கியம், அதற்கு விழிப்புணர்வு அவசியம். அரசின் டிஜிட்டல் அமைப்புகளைச் சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க ‘தேசிய சைபர் பாதுகாப்புச் செயல்பாட்டு மையம்’ ஒன்றை நாம் நிறுவியுள்ளோம்.

இது 24 மணிநேரமும் அரச அமைப்புகளைக் கண்காணிக்கும். தற்போது 12 நிறுவனங்கள் இதில் இணைந்துள்ளன, மேலும் பல நிறுவனங்களை இணைக்கவுள்ளோம்.

இதற்காக நவீன மென்பொருட்களைப் பயன்படுத்தி ஊடுறுவல் அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறியும் வசதிகளைச் செய்துள்ளோம். இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சின் செயலாளருடன் ஆலோசித்து வருகிறோம். இந்த நிதி வங்கி முறைமையூடாகவே சென்றிருப்பதால், சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து இதை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

டிஜிட்டல் தடயங்கள் தெளிவாக உள்ளன. எதிர்க்கட்சியினர் எமது டிஜிட்டல் கலைச்சொற்களைப் பயன்படுத்தி விமர்சிக்கலாம், ஆனால் பேசுவது சுலபம், வேலையைச் செய்து முடிப்பது கடினம்.

நாம் முறையாக வேலை செய்கிறோம். இந்த விசாரணைகளின் போது திருடர்கள் சாட்சியங்களை அழிக்க முயலலாம் என்பதால், சில விடயங்களை இரகசியமாகப் பேண வேண்டியுள்ளது. புதிய பல விடயங்களை நாம் கண்டறிந்துள்ளோம், அவற்றைச் சட்ட ரீதியாக உறுதிப்படுத்தி வருகிறோம் என்றார்.