தனிமையில் வாழும் முதியவர்கள் மற்றும் வயோதிப பெற்றோர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, தற்போதைய சூழ்நிலையில் மிகவும் உணர்வுபூர்வமான மற்றும் அத்தியாவசியமான பொறுப்பாகும் என இலங்கை பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிள்ளைகள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு அல்லது வெளிப்பகுதிகளுக்குச் சென்றுள்ளதால், நாட்டில் பல முதியவர்கள் தனிமையில் வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் பல்வேறு ஆபத்துகளுக்குள்ளாகும் சம்பவங்கள் அண்மைக்காலமாகப் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, போதைப்பொருளுக்கு அடிமையான சிலர் பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிடும் நோக்கில், இவ்வாறான தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளை இலக்கு வைக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் கொலைகள் கூட அரங்கேறியுள்ளதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
முதியவர்களின் பாதுகாப்பிற்காகப் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள் சிலவற்றை பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.
முதியவர்கள் வாழும் வீடுகள் தொடர்பாக பொதுமக்கள் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதன்படி, வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் போதுமான வெளிச்சம் கிடைக்கும் வகையில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
அறிமுகமற்ற அல்லது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படாத நபர்களை எந்தவொரு பணிக்காகவும் வீட்டிற்குள் அனுமதிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அயலவர்களுடன் நல்லுறவைப் பேணுவதன் மூலம் பரஸ்பர பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தனிமையில் வாழும் முதியவர்கள் தொடர்பான தகவல்களை கிராம உத்தியோகத்தர் மற்றும் சமூகப் பொலிஸ் குழுவினருக்கு அறிவித்து, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேவேளை, அவசரத் தேவைகளுக்கான ஏற்பாடுகள் குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, முதியவர்கள் எளிதில் பயன்படுத்தக்கூடிய கைதொலைபேசி ஒன்றினை வழங்கி, அதில் பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் பொலிஸாரின் தொலைபேசி இலக்கங்களை வேகமாகத் தொடர்புகொள்ளும் வகையில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.
அவசர இலக்கங்களை வீட்டில் தெளிவாகக் காணக்கூடிய இடத்தில் பெரிய எழுத்துக்களில் காட்சிப்படுத்த வேண்டும்.
(உதாரணமாக: பிரதேச பொலிஸ் நிலைய இலக்கம், 119 அவசர சேவை, 1990 சுவசெரிய நோய் காவுவண்டி சேவை, அயலவர் மற்றும் குடும்ப மருத்துவரின் இலக்கங்கள்)
வீட்டு உதவியாளர்களை நியமிக்கும் போது, முதியவர்களைப் பராமரிப்பதற்காக நியமிக்கப்படும் வெளிநபர்கள் அல்லது வீட்டு உதவியாளர்களின் சேவைகளைப் பெறும்போது, அவர்களின் பின்னணி குறித்து முறையாக விசாரிப்பதுடன், அவர்கள் வசிக்கும் பிரதேச பொலிஸ் நிலையத்திலிருந்து பெறப்பட்ட ‘பொலிஸ் அறிக்கை’ மூலமாக அவர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்த பின்னரே வேலைக்கு அமர்த்த வேண்டும்.
பெற்றோர்களையும் முதியவர்களையும் தனிமைப்படுத்துவதை இயன்றவரை குறைத்து, அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பில் தொடர்ச்சியான அக்கறையுடன் செயற்படுமாறும், ஏற்படக்கூடிய குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுத்து விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.



