தமிழர்களின் பிரச்சினைக்காக கூட்டமைக்கின்றோம் என்பதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கிறது

தமிழர்களின் பிரச்சினைக்காக கூட்டமைக்கின்றோம் என்று கூட்டு சேர்ந்ததில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருப்பதாகவே தோன்றுகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான  அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று வெள்ளிக்கிழமை (17) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அண்மையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் சார்ந்த ஆறு கட்சிகளின் கூட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு கூட்டாக குரல் கொடுத்து செயற்படுவதே என கூட்டுக் கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

எத்தகைய அரசியல் கொள்கை விளக்கம் இங்கே? அவசர அவசரமாக கூட்டு உருவாக்கப்பட்டது ஏன்? இதன் பின்னணியில் உள்ள அரசியல் சக்தி எது? இக்கூற்று அரசியல் மேடை யாரை திருப்திப்படுத்துவதற்காக? கட்சிகள் தங்களுக்கு புதிய புதிய மேடைகளை தெரிந்துகொள்ளலாம்.

ஆனால், அது தமிழர்களின் அரசியலுக்கு எதிரானது எனில் அதற்கு எதிரான மக்களின் தீர்ப்பு நிச்சயம் உண்டு என்பதையும் கூற விரும்புகின்றோம்.

தமிழர்கள் முகங்கொடுக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நீங்கள் எந்தெந்த பேரினவாத கட்சிகளோடு சேர்ந்து ஆட்சி அமைத்தீர்களோ, அமைச்சுப் பொறுப்பை ஏற்று சலுகைகளை முழுமையாக அனுபவித்தீர்களோ, அவர்களே காரணம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். சலுகைகளுக்காக சாமரை வீசிய உங்கள் மனசாட்சிக்கும் தெரியும். இந்நிலையில் தமிழ் மக்களுக்காக புதிய கூட்டு என்பது கேலிக்கூத்து என்பதே மக்கள் அபிப்பிராயம்.

வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தின் அரசியல் பிரச்சினையிலும் அன்றாட பிரச்சினைகளிலும் தினமும் களத்தில் நின்று மக்களோடு மக்களாக போராடும் கட்சி ஒன்றை தவிர்த்துவிட்டு, அதுவும் உங்களோடு நாடாளுமன்ற எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் கட்சியை புறந்தள்ளி “நாங்கள் தமிழர்களின் பிரச்சினைகளுக்காக கூட்டாக குரல் கொடுக்கப் போகின்றோம்” என்பதன் அரசியல் சூழ்ச்சியை மக்கள் அறிவர்.

தமிழர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணம் ஒற்றை ஆட்சி அரசியல் யாப்பும் சிங்கள பௌத்த பேரினவாதமும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

நீங்கள் முண்டு கொடுத்துக்கொண்டிருக்கும் பிரதான கட்சியே அதற்கு காரணமாக இருக்கும்போது அதனை விமர்சிக்கவோ அதனின்று வெளியேறவும் துணிவற்றிருக்கும் நீங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு கூட்டாக செயற்படப் போகின்றோம் என்பதை நம்புவதற்கு தமிழ் மக்கள் ஏமாளிகள் அல்ல என்பதையும் கூற விரும்புகின்றோம்.

அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு யோசனைகளை முன்வைப்பதற்காக தமிழ் சட்டத்தரணிகளும் சிவில் சமூக அமைப்புகளும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தலைமையிலான கட்சியும் கூட்டாக சேர்ந்து கலந்துரையாடல்களை நடத்திக்கொண்டிருக்கையில் அவர்களோடு இணையவேண்டிய நீங்கள் புதிதாக தமிழர்களுக்காக கூட்டு அமைக்கின்றோம் என்பது மறைமுகமாக ஒற்றை ஆட்சி இருளுக்குள் தமிழர்களின் அரசியலை தள்ளுவதற்கான நரித்தன தந்திர அரசியலாகவே சிந்திக்கவேண்டியுள்ளது.

கறுப்பு ஜூலையை நினைவுகூரும் மாதத்தில் உங்கள் கூட்டை ஆரம்பித்துள்ளீர்கள். நாட்டில் தமிழர்களின் அவல நிலையை 1983 இன அழிப்பு சிங்கள பௌத்தத்தின் கோர முகத்தினை உலகிற்கு காட்டியது.

இனப்படுகொலை யுத்தம் நடந்தபோது நீங்கள் யாரோடு நின்றீர்கள் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். தற்போது செம்மணி சமூக புதைகுழி அரசியல் நீதியின் சாட்சியாக தோன்றுகையில் அது தொடர்பான நீதிச் செயற்பாட்டில் உங்கள் முகங்களை காண முடியவில்லை.

நீதிக்கான குரலையும் கேட்க முடியாதுள்ளது. படையினரும் தொல்லியல் திணக்களமும் கடந்த காலங்களில் மட்டுமல்ல, நிகழ்காலத்திலும் மக்களின் காணிகளை கைப்பற்றுவதற்காக எடுக்கின்ற முயற்சிகளின்போது எங்கு இருக்கிறீர்கள் என்று தெரியாமல் இருக்கின்றபோது தமிழர்களின் பிரச்சினைக்காக கூட்டமைக்கின்றோம் என்பதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருப்பதாகவே தோன்றுகின்றது.

வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் சார்ந்த அரசியல் பிரச்சினை என்பதும், மலையக தமிழர்களின் இருப்பு மற்றும் அரசியலும், முஸ்லிம்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் என்பதும் தனித்துவமானவை.

அதற்கான அரசியல் கொள்கை விளக்கம் நடைமுறை சார்ந்த செயற்பாடுகளை புதிய கூட்டு, மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அது தொடர்பான இணக்கப்பாட்டிலேயே கூட்டு உருவாகுதல் வேண்டும். அதுவும் வாக்களித்த மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிகழ்தலே சாலச் சிறந்தது. ஆனால், மக்களுக்கு தூரமாக நட்சத்திர ஹோட்டலில் நிகழ்வது மக்களுக்கான கூட்டாக இருக்க முடியாது என்பதே எமது கருத்து நிலைப்பாடு என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.