நாட்டில் எவ்விதமான தமிழ் இனப்படுகொலையும் இடம்பெறவில்லை என்பதில் சர்வஜன அதிகாரம் கட்சி உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறது. அண்மைக்காலமாக இவ்வாறான கருத்துகள் முன்வைக்கப்படுவது குறித்தும், பாராளுமன்றத்தில் பயங்கரவாதிகள் நினைவுகூரப்படுவது குறித்தும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அரசாங்கம் உடனடியாக தமது நிலைப்பாட்டை நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென சர்வஜன அதிகாரம் கட்சியின் உப தலைவர் கலாநிதி சன்ன ஜயசுமன வலியுறுத்தியுள்ளார்.
சர்வஜன அதிகாரம் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மூன்று முக்கிய விடயங்கள் குறித்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
கடந்த மே மாதம் 18ஆம் திகதி வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் கூறி நினைவு தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
எமது நாடு எக்காலத்திலும், எந்தவொரு இடத்திலும் தமிழ் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்பதில் சர்வஜன அதிகாரம் கட்சி மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றது.
இருப்பினும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இவ்வாறான நிகழ்வுகளை முன்னெடுக்க இடமளித்துள்ளமை கவலையளிக்கிறது.
இது தொடர்பில் கடந்த 18 மற்றும் 19 நாட்களில் தமிழ் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்ததோடு, தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷனல் அக்மீமன, பாராளுமன்றத்தில் பத்திரிகை செய்திகளை மேற்கோள் காட்டி இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்தியிருந்தார்.
இவ்வாறான கருத்துகள் சர்வதேச ரீதியில் நாட்டுக்கு பாரிய அபகீர்த்தியை ஏற்படுத்துவதுடன், எதிர்காலத்தில் நாடு பல்வேறு பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழலையும் உருவாக்கும். எனவே, இது குறித்து ஜனாதிபதி நாட்டுக்கு தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும்.
இரண்டாவது விடயமாக, இனப்படுகொலை நினைவு கூறல்கள், பிரிவினைவாத மற்றும் பயங்கரவாதிகளை நினைவுபடுத்தும் நிகழ்வுகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறுகின்றன. இவ்வாறான நிகழ்வுகளில் அவர்களது சின்னங்கள், நிறங்கள் மற்றும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
இது தொடர்பில் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் அறிந்திருந்தனவா? அவர்கள் அறிந்திருந்தால் இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், யாருடைய அழுத்தத்தின் பேரில் அல்லது அறிவுறுத்தலின் பேரில் மௌனம் காக்கப்படுகின்றது என்ற கேள்வியை நாங்கள் ஜனாதிபதியிடம் முன்வைக்கின்றோம்.
மூன்றாவது விடயமாக, பாராளுமன்றத்தில் கடந்த மே 18 அன்று இலங்கை தமிழரசு கட்சி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிஹரன், பிரிகேடியர் பால்ராஜ் என்பவரை நினைவு கூர்ந்து புகாராரம் சூட்டியுள்ளார்.
பிரிகேடியர் அந்தஸ்து என்பது இந்த நாட்டின் இராணுவத்திலிருந்தவர்களுக்கு மட்டுமே உரித்தானது. பால்ராஜ் என்பவர் 2000ஆம் ஆண்டு ஆனையிறவு இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தி, ஆயிரக்கணக்கான இளம் வீரர்களின் உயிரைப் பறித்த ஒரு கொலைகாரன், அலகோசு. அத்தகைய நபரொருவரை பாராளுமன்றத்தில் நினைவு கூர இடமளித்தது எவ்வகையில் நியாயம்?
குறிப்பாக, அந்த தருணத்தில் பாராளுமன்றத்தின் தலைமைத்துவத்தை வகித்த தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர, இந்த பயங்கரவாதியை நினைவு கூரும் போது ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை? பாராளுமன்றத்தின் தலைமைத்துவத்துக்கு பொறுப்புக்கூறும் கடப்பாடு உண்டு.
பால்ராஜை பிரிகேடியராகக் கருதுவதால்தான் அவர் மௌனம் காத்தார்களா? ஜனாதிபதி அவர்களே, உங்கள் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகரவைப் போலவே, ஆயிரக்கணக்கான இளைஞர்களின் உயிரிழப்புக்கு காரணமான அந்த கொலைகாரனை நீங்களும் பிரிகேடியராகவே கருதுகிறீர்களா இல்லையா என்பதை உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றார்.





