நிதி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் நபர், அந்த பதவிக்கு எந்தவகையிலும் தகுதியில்லை. அதனால் திறைசேரியில் காணாமல் போயுள்ள நிதிக்கு அவரை நியமித்த ஜனாதிபதியே பொறுப்புக்கூற வேண்டும். நிதி அமைச்சின் செயலாளர் அவுஸ்திரேலியாவில் 15 வருடங்கள் என்ன தொழிலை செய்துவந்தார் என்பதை முடியுமானால் அவர் தெரிவிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
தோன்றிய அனைத்தும் அழியக்கூடியது என்ற தர்ம போதனைக்கு அமைய, இந்த அரசாங்கத்துக்கும் அதனையே தெரிவிக்க விரும்புகிறேன். அரசாங்கம் நன்றாக சிக்கிக்கொண்டிருக்கிறது. ஏனெனில் அரசாங்கத்துக்கு மக்கள் இல்லை. இவர்களுக்கு பெரிய வேலைகள் செய்ய முடியாது. சிறிய வேலைகளே செய்ய முடியும். பெரிய வேலைகளை செய்ய இவர்களுக்கு ஆட்களும் இல்லை, அனுபவமும் இல்லை.
அத்துடன் தற்போது திறைசேரியில் இருந்த 2.5 மில்லியன் டொலர் காணாமல் போயுள்ளது. இவ்வாறானதொரு சம்பவம் இதற்கு முன்னர் இடம்பெற்றதில்லை. நிதி அமைச்சின் செயலாளர் ஒரு அனுபவமற்றவர்.
அவர் அவுஸ்திரேலியாவில்தான் பணியாற்றி இருக்கிறார். ஆனால் அவர் அவுஸ்திரேலியால் என்ன தொழில் செய்துவந்தார் என்பதை முடியுமானால் தெரிவிக்கட்டும் என நான் சவால் விடுகிறேன். அவுஸ்திரேலியாவில் எமது நண்பர்கள் இருக்கிறார்கள். நிதி அமைச்சின் செயலாளர் அவுஸ்திரேலியால் செய்துவந்த தொழிலை சொல்வதற்கு வெட்கப்படுகிறேன்.
நிதி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் நபர் எந்த வகையிலும் நிதி அமைச்சின் செயலாளர் பதவிக்கு தகுதியில்லை. அவர் 15 வருடங்கள் வெளிநாட்டில் இருந்துள்ளார். அந்த காலப்பகுதியல் அவர் செய்துவந்த தொழில் நிதி அமைச்சின் செயலாளர் பதவிக்கு நியமிக்க எந்த தகுதியும் இல்லை. அதனால் அவர் அவுஸ்திரேலியாவில் செய்துவந்த தொழில் தொடர்ப்பில் அவருடைய சுயவிபரக்கோவையைை முடிந்தால் வெளிப்படுத்த வேண்டும்.
கடந்த காலங்களில் அமெரிக்காவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணியாற்றிவந்த ஒருவரை நாட்டு மக்கள் நாடடின் ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள். இறுதியில் ஒன்றறை வருடங்களில் கைவிட்டுச் சென்றார். அதேபோன்று தற்போதைய அரசாங்கத்துக்கும் நாட்டை முன்னேற்றிச் செல்ல தேவையான ஆட்கள் இல்லை. இவர்கள் சிறு பிள்ளைகள். அதனால் இவர்களுக்கு அழிவுபடுத்தல், ஆர்ப்பாட்டம் செய்தல் போன்ற சில்லறை வேலைகளையே செய்ய முடியும்.
நிதி அமைச்சின் செயலாளரை நியமித்த ஜனாதிபதியே இதற்கு பொறுப்பு கூறவேண்டும். அவரை நியமிப்பதற்கு முன்னர், அவர் அவுஸ்திரேலியாவில் 15 வருடங்கள் என்ன செய்துவந்தார் என்பதை ஜனாதிபதி தேடிப்பார்த்து இருக்கவேண்டும்.
அதேநேரம் அரசாங்கம் போலி வங்கிக் கணக்கொன்றுக்கே பணத்தை வைப்பிலிட்டிருக்குமும் விடயத்தை கண்டுபிடித்திருப்பதும் சாதாரண எழுதுவினைஞர் ஒருவராகும். அவர் இதற்கு முன்னர் இந்த இந்த மின்னஞ்சல் பரிமாற்றத்துடன் சம்பந்தப்பட்டவர்.
அதனால், அதற்கு முன்னர் அனுப்பியிருந்த மின்னஞ்சல் மொழி நடைக்கும் இறுதியாக வந்திருந்த மின்னஞ்சல் மொழி நடைக்கும் இருந்த வித்தியாசத்தை அறிந்துகொண்டே அவர் இதனை கண்டுபிடித்துள்ளார். அவ்வாறு இல்லாமல் அரசாங்கத்தில் இருப்பவர்கள் யாரும் இதனை கண்டுபிடிக்க வில்லை என்றார்.



