தெமட்டகொடையில் 19 துப்பாக்கிகள் மீட்பு ; தப்பியோடிய பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைது

தெமட்டகொடை பகுதியில் கடந்த ஜூன் 3ஆம் திகதி 19 துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான ஆணும் பெண்ணும் கதிர்காமம் பகுதியிலுள்ள விடுதியொன்றில் வைத்து மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 3ஆம் திகதி மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவினால் தெமட்டகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் விசேட தேடுதல் வேட்டையொன்று நடத்தப்பட்டது.

இதன்போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 19 ரிவோல்வர் ‘ ரக துப்பாக்கிகள், 24 ரி-56 ரக தோட்டாக்கள், 100,400  போதை மாத்திரைகள் மற்றும் 15 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் கீழ், சம்பவ இடத்திலேயே இரு பெண்கள் உட்பட நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

எனினும், இந்த குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான ஆணும் பெண்ணும் பொலிஸார் வருவதை அறிந்து அப்பகுதியிலிருந்து தப்பியோடி தலைமறைவாகியிருந்தனர்.

இந்நிலையிலேயே, மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று (16) செவ்வாய்க்கிழமை அதிகாலை கதிர்காமம் பகுதியிலுள்ள விடுதியொன்றில்,  மறைந்திருந்த பிரதான சந்தேகநபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 28 வயதுடைய வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், இவர்கள் குற்றச்செயல்களுக்காக பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.