தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாகாண சபை தேர்தல் தொடர்பில் எந்தவித அக்கறையும் இல்லாதுள்ளது

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்று இரண்டு வருடத்தை எட்டவுள்ள நிலையில் மாகாண சபை தேர்தலில் நடத்தாமல் இழுபறி நிலையில் பின்போடப்பட்டு, மாகாண சபை தேர்தல் தொடர்பில் எந்தவித அக்கறையும் இல்லாமல் இருந்து வருகின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆளுனர்களின் அதிகாரம் என்பது அவர்கள் நினைத்தபடி அதிகாரத்தை பயன்படுத்தும் நிலை காணப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது எனவும் அவர் அரசை சாடியுள்ளார்

மட்டக்களப்பில்  வெள்ளிக்கிழமை (03) காலை இடம் பெற்ற ஊடகவியலார் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சத்தியின் செல்வாக்கு குறைந்து கொண்டு வருவதை வைத்துக் கொண்டு அவர்கள் அந்த விடயத்தை காரணம் காட்டாமல் தேர்தலை பிற்போடுகின்றனர்.

மாகாண சபை தேர்தலில், மாகாண சபை முறைமை என்பது 1987 யூலை  29ம் திகதி மக்களின் அதிகாரப் பகிர்வுக்காகவே  கைச்சாத்திடப்பட்டது.

வடக்கு, கிழக்கு மாகாண சபையாக இருக்கலாம் அல்லது ஏனைய சபையாக இருக்கலாம் இங்கு ஜனாதிபதியின் நியமனத்தை வைத்துக் கொண்டு ஆளுனர்களால் அதிகார துஸ்பிரயோகம் இடம் பெற்று வருவதாக ஒரு கருத்து உள்ளது.

இவ்வாறான விடயங்களை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது உடனடியாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் தேர்தலை நடத்த வேண்டும் இல்லை யென்றால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆளுநர் தனது அதிகார வரம்புக்கு அப்பால் தன்னிச்சையாக செயற்படும் செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும்

இலங்கை இந்திய ஒப்பந்தம் 13வது திருத்த அரசியல் பகிர்வின்படி மாகாண சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் ஏற்கெனவே ஆட்சி செய்த ஜனாதிபதிகளினால்  புடுங்கப்பட்டு வந்திருக்கின்றது.

இப்பொழுதும் இந்த அரசாங்கம்  மாகாண சபைக்கு கீழ் இருக்கின்ற அதிகாரங்களை மத்திய அரசுக்கு கீழ் கொண்டு வரும் போக்கு படிப்படியாக இடம் பெற்று வருகின்றது.

மாகாண வைத்திய சாலைகள் விடயம் தொல் பொருள் விடயம் போன்றவற்றிலும் இப்போது ஆக்கிரமிப்பு இடம் பெறுவதாக அறிய முடிகிறது.

இது அபிவிருத்தி என்ற போர்வையிலே  அதாவது மத்திய அரசின் கீழ் நடை பெறும் அபிவிருத்தி தான் சரியான அபிவிருத்தி என்ற தவறான புரிதல்களை பரப்புகின்றார்கள்.

ஆகவே மாகாணத்தின் அதிகாரங்களை புடுங்கி எடுக்காமல் மாகாண சபைக்கு போதிய நிதியினை ஒதுக்கும் போது அங்குள்ள மாகாண அரசாங்கம்  அபிவிருத்திகளை மேற்கொள்ளும் என்பதையும் நான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் முக்கியமான விடயமாக இருக்கும் பண்ணையாளர்களின் மேச்சல் தரை பிரச்சனை மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரைகள் இன்றும் இழுபறி நிலையிலேயே உள்ளது கடந்த மாதம் மாண்புமிகு ஜனாதிபதிவந்த போது 1570 ஏக்கர் நிலத்தினை விடுவிப்பதாக கூறிச் சென்றாரே தவிர அதற்கான வர்த்தமானி எதுவும் வெளியிடவில்லை.

நேற்று முன்தினம் அதாவது இரண்டு நாட்களுக்கு முன் கால்நடை மேச்சலில் இருந்த பண்ணையாளர்களை அப்பகுதியில் உள்ள சிங்கள இனத்தைச் சேர்ந்த நில ஆக்கிரமிப்பாளர்கள் கத்தியுடன் வந்து  அச்சுறுத்தி நீங்கள் இங்கு வர வேண்டாம் என மிரட்டி அச்சுறுத்திய ஒரு சம்பவமும் இடம் பெற்றுள்ளது

இதில் இன்னுமொரு விடயம் என்னவென்றால் அரச கட்சியை விடுத்து  ஜனாதிபதிக்கு எதிரான வேறு சிங்கள கட்சியை சேர்ந்தவர்கள் இந்த அரசாங்கத்தை மக்களிடம் நல்லவர்கள் இல்லை என்று காட்டுவதற்காகவும் மக்கள் மத்தியில் ஒரு அதிருப்தியை ஏற்படுத்துவதற்கும் இவ்வாறு செய்யலாம் என்பதையும் சிந்திக்க வேண்டும்.

மேச்சல் தரை பிரச்சனை என்பது வெறுமனே பண்ணையாளர்களின் பிரச்சனை மாத்திரமல்ல மட்டக்களப்பு மாவட்டத்திலே நில அபகரிப்பு செய்து சிங்கள குடியேற்றங்களை அத்துமீறி செய்து இங்கிருக்கின்ற இனப்பரம்பலை குறைப்பதற்காக ஏற்கெனவே மகிந்த ராஜபக்ச வினால் திட்டமிடப்பட்ட திட்டமாகும் அந்த திட்டம் இப்போது வரை உள்ளது. என தெரிவித்தார்.